தமிழ்நாடு

தமிழகத்தில் கட்டாய சந்தை முறையை எதிர்நோக்கும் விவசாயிகள்! இடைத் தரகர்களால் தொடரும் இழப்பு

DIN

திண்டுக்கல்: இரண்டாவது பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு லாபம் பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், இடைத் தரகர்களால் ஏற்படும் இழப்புகளை தடுக்க தமிழகத்தில் கட்டாய சந்தை முறையை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 தமிழகத்தில் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறி மற்றும் பழங்கள், பணப் பயிர்கள், மலைப் பயிர்கள் என அனைத்து வகையான பயிர் வகைகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நகரமயமாக்கல் சூழலில், விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வரும் நிலையிலும், வீரிய ஒட்டுரக விதைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப உதவிகளுடன் மகசூலில் தமிழகம் தன்னிறைவு பெற்று வருகிறது. 2-ஆவது பசுமைப் புரட்சித்திட்டத்தின் கீழ் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு லாபம் பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் உற்பத்தி உயர்ந்த அளவுக்கு விவசாயிகளின் லாபம் அதிகரிக்கவில்லை.
 இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இடைத் தரகர்களின் தலையீடு. இதை தடுக்கும் வகையில், தேசிய வேளாண் விற்பனை சந்தை முறை (இ-நாம்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட சிறந்த திட்டமாக கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வரும் கட்டாய சந்தை முறையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பது தான் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள சில வேளாண்மை அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்டாய சந்தை அமலுக்கு வரும்போது, அனைத்து விவசாயிகளும் விளைபொருள்களை ஓரிடத்திற்குள் கொண்டு வருவதற்கும், அங்கு இடைத் தரகர்களின் தலையீடு இல்லாமல், வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். விளைப்பொருள்களின் தரத்திற்கு ஏற்ப குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்வதுடன், அதிக விலைக்கு கேட்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதன் மூலமாக விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதன் மூலம், வெளிசந்தையிலும் விளைப் பொருள்களின் விலை கணிசமாக குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என வேளாண்மை அலுவலர்கள் கூறுகின்றனர்.
 பலன் பெற முடியாத நிலையில் விவசாயிகள்: இதுதொடர்பாக வேளாண்துறை ஓய்வுப் பெற்ற அலுவலர் ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 281 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் சுமார் 100 விற்பனைக் கூடங்களுக்கு நிரந்தர இட வசதி இல்லை. இதனால், சேமிப்புக் கிடங்கு வசதிகளுடன் கூடிய இந்த விற்பனைக் கூடங்களை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. இடைத் தரகர்கள் சார்பில், விதைப்பு, இடுபொருள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கப்படுகிறது. அந்த கடனை அடைப்பதற்காக, விளைப் பொருள்களை சம்பந்தப்பட்ட இடைத் தரகர்களுக்கே வழங்க வேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் விளைப் பொருளுக்கு இடைத் தரகர்கள் நிர்ணயிப்பதே விலையாக உள்ளது. இதனால், மகசூல் அதிகரித்தும் அதற்கான பலனை விவசாயிகள் பெற முடியாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 இதுபோன்ற சிக்கலுக்கு அனைத்து விவசாயிகளையும், வியாபாரிகளையும் கட்டாய சந்தை முறைக்குள் கொண்டு வருவதன் மூலம் தீர்வு காண முடியும். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தலா ஒரு கட்டாய சந்தை முறை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விளைப் பொருள்களை கொண்டு வரும் விவசாயிகளிடம் ஆலோசித்து, வேளாண் அலுவலர்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
 விவசாயிகள் பயிரிடும் விவரங்கள் பதிவு, வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கல், விளைப் பொருள்கள் வைக்க உள்கட்டமைப்பு வசதி, போக்குவரத்து எளிமைப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
 கண்டுகொள்ளாத கட்சிகள்: கொடகனாறு ஏரிக் குளங்கள் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலர் இரா.சுந்தரராஜன் கூறியதாவது: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்ற ஒற்றை வாக்குறுதியை மட்டுமே ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், இடை தரகர்கள் நீங்கலாக, விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வளம் பெறுவதற்கான கட்டாயச் சந்தை முறை குறித்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிப்பதில்லை.
 தரகு மண்டிகளுக்கும், தனியார் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்படும் விளை பொருள்களுக்கு, ஒரு ரூபாய்க்கு 10 பைசா கமிஷன் வழங்கவும், பொருள்களை எடை போடுவதில் இடைத் தரகர்கள் கூறும் அளவை மட்டுமே விவசாயிகள் ஏற்க வேண்டிய நிலையும் உள்ளது. மாதிரி காய் (சாம்பிள் காய்) என 2 முதல் 3 கிலோ எடுத்துக் கொள்கின்றனர். கட்டாய சந்தை முறை அமலுக்கு வந்தால் இதுபோன்ற இழப்புகளிலிருந்து விவசாயிகள் விடுபட முடியும் என்றார்.
 - ஆ.நங்கையார்மணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT