தமிழ்நாடு

காவி நிறப்பட்டில் அருள் பாலிக்கும் அத்திவரதர்: சுவாமியை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?

DIN


காஞ்சிபுரம்: பட்டெடுக்க வேண்டும் என்றால் காஞ்சிபுரம் சென்ற நிலை மாறி, இன்று காவி நிறப் பட்டில் காட்சியளிக்கும் அத்திவரதரைக் காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

20வது நாளான இன்று பக்தர்களுக்கு காவி நிறப் பட்டுடுத்தி அருள் பாலிக்கும் அத்திவரதர், தன்னை தரிசிக்க வரும் கோடானு கோடி பக்தர்களுக்கு தாங்கள் கடந்த வந்த பாதைகளில் ஏற்பட்ட வலிகளை எல்லாம் மறக்கச் செய்யும் வசீகரத்துடன் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் வடக்கு மாட வீதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சுமார் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள், வயதானோர், குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரங்கசாமி குளத்தோடு சிற்றுந்துகள் நிறுத்தம்: தொடர்ந்து, காஞ்சிபுரத்துக்கு பக்தர்கள் அதிகம் வருகை புரிவதால் தற்காலிக பேருந்து நிலையங்களான ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையிலிருந்து ரங்கசாமி குளம் வழியாக வரதர் கோயிலை அடைந்து பெரியார் நகர் வரை சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.  

இந்நிலையில், வரதர் கோயிலிலிருந்து ரங்கசாமி குளம் வரை அதிகமானோர் சாலையில் சென்று வந்தனர். இதனால், சிற்றுந்துகள், பேருந்துகளை இயக்க முடியவில்லை. எனவே, ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கையிலிருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரிலிருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் வரை நடந்து மாடவீதிகளுக்குச் சென்றனர். 

போலீஸாரின் நடவடிக்கையால் முக்கியஸ்தர்கள் வரிசை சீராகச் சென்றது. பக்தர்கள் அதிக பட்சமாக 3 மணிநேரம் காத்திருந்து முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். பொதுதரிசன வரிசையிலும் காலை முதல் இரவு வரை பக்தர்களின் வருகை சீராக இருந்தது. இதனால், எவ்வித இடையூறுமின்றி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  

தரிசனத்துக்கு 6 மணிநேரம்: பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்திலிருந்து வஸந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை அதிகபட்சமாக 6 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 3.30 மணி நேரத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்

அத்திவரதரை விரைவு தரிசன வரிசையில் தரிசிப்பதற்காக ரூ.300 கட்டணத்தில்  இணையதளத்தில் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 18 நாள்களாக முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர், சகஸ்ரநாம அர்ச்சனைக்கு முன்பதிவு செய்தோர் உள்ளிட்டோர் தரிசனம் செய்து வந்தனர். 

இந்நிலையில், அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர் நாள்தோறும் மாலை 6 மணி வரையில்தான் முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், அதன்பிறகு, இரவு 10 மணிவரை விரைவு தரிசனம் செய்ய இணையதளத்தில் ரூ.300 செலுத்தி அனுமதிச் சீட்டு பெறலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மாலை நேரத்தில் பக்தர்கள் நிறைய பேர் முக்கியஸ்தர்கள் வரிசைக்கு வந்தனர். 

அப்போது, இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாததால், இன்று மட்டும் எங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முக்கியஸ்தர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஒருநாள் மட்டும் விதிவிலக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT