தமிழ்நாடு

சென்னையில் 90 ரூட் தல மாணவர்கள்: காவல்துறை கண்டுபிடித்த அதிர்ச்சித் தகவல்

DIN


சென்னை: சென்னையில் மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்திகளுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பற்றிய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த தாக்குதல் சம்பவம் மேலும் நடக்காத வகையில் தடுக்கும் வழிமுறைகளைக் காணும் நடவடிக்கைகள் குறித்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இனி பேருந்தில் ரூட் தல என்னும் வழக்கமே இருக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையினர் கூறியிருப்பதாவது, சென்னையில் வெறும் 6 வழித் தடங்களில் மட்டும் 90 ரூட் தல மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 90 பேரிடமும், அடுத்த 6 மாதத்துக்கு எந்த பிரச்னையிலும் ஈடுபட மாட்டோம் என்று பத்திரம் எழுதி வாங்க முடிவு செய்துள்ளோம். அதையும் மீறி 6 மாதத்துக்குள் எந்தத் தவறு செய்தாலும் கைது செய்யப்படும் மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும், ரூட் தல மாணவர்கள் மற்றும் பெற்றோரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கவும், பிரச்னைகக்குரிய 6 வழித்தடங்களில் செல்லும் பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.

ரூட் தல மாணவர்களை பின்னால் இருந்து இயக்கும் முன்னாள் மாணவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பேருந்துகளில் பேருந்து தினம் கொண்டாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதும், தகராறில் ஈடுபடுவதிலும் 90 ரூட் தல மாணவர்களின் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று மாநகரப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளுடன் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். சென்னையில் பரபரப்பான பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால், பொதுமக்கள் பீதியடைந்ததுடன் சக பேருந்து பயணிகளும், பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த இருவரையும், கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் புதன்கிழமை அளித்த பேட்டி:
மாநகரப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் விவரங்களை காவல்துறையிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில், இரு மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ளோம். 

அதன் பின்னர், அந்த மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் விளக்கம் கேட்கப்படும். அதன் பேரில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை, இதுபோன்ற மோதலில் ஈடுபட்ட 26 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீதான நடவடிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் கல்லூரிக்கு வர அனுமதி அளித்திருக்கிறோம். மற்ற மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து இடை நீக்கத்திலேயே உள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க கல்லூரி சார்பில் தீவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்களைக் கண்காணிக்க பேராசிரியர்களைக் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர், தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சோதனை செய்து, அவர்கள் வகுப்பறைக்குச் செல்வதை உறுதி செய்து வருகின்றனர்.

அதுபோல, மோதலில் ஈடுபட்டு இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகும் மாணவர்களுக்கு ஆலோசனைகளும் கல்லூரி சார்பில் வழங்கப்படுகிறது. இதில் தவறை உணரும் மாணவர்களுக்கு மட்டுமே, கல்லூரிக்கு மீண்டும் வர அனுமதி அளிக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாணவர்கள் கல்லூரிக்குள் மோதலில் ஈடுபடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது.

கல்லூரிக்கு வெளியேயும், மாணவர்களின் மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து தீவிர முயற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இதுபோன்ற மோதலிலும், ரகளையிலும் ஈடுபட அவர்களின் குடும்பச் சூழலும் ஒரு காரணம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT