தமிழ்நாடு

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

DIN


புதிய மோட்டார் வாகனச் சட்ட வரைவு அறிக்கையில்,  வாகனங்களுக்கான பதிவு,  புதுப்பித்தல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நாமக்கல்லில் அந்தச் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.குமாரசாமி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:  புதிய மோட்டார் வாகன கட்டணத் தொகை குறித்த வரைவறிக்கையை மத்திய அரசு  கடந்த 24-இல் வெளியிட்டது. 
அதில், லாரிகளுக்கான பதிவுக் கட்டணம்(ரிஜிஸ்ட்ரேஷன்),  20 ஆண்டுகளாக அமலில் இருக்கும் ரூ.1,500-இல் இருந்து ரூ.20 ஆயிரமாக, சுமார் 14 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 
அதேபோல், புதுப்பித்தல் கட்டணம்(எப்.சி.)  ரூ.1,500-இல் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டண உயர்வுகளையும் திரும்பப் பெற வேண்டும். இதுமட்டுமின்றி, 15 ஆண்டுகள் ஓடிய லாரிகளை இயக்காமல் ஓரம் கட்டிவிட வேண்டும் என்றும்  6 மாதங்களுக்கு ஒரு முறை லாரிகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை லாரியைப் புதுப்பிப்பதற்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும். இதனால் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகும். மேலும், டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு போன்றவையும் வெகுவாகப் பாதிக்கிறது. சுங்கக் கட்டணம் 6 மாதத்துக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது. 
நாங்கள் அதில் இருந்து விலக்குக் கேட்கவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாகச் செலுத்தும் வகையிலான நடைமுறையைக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தமும் செய்தோம். பேச்சுவார்த்தையின்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றனர். அதன்பின் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.  தற்போதைய சுழலில் லாரிகளில் லோடு ஏற்றுவதும் மிகவும் குறைந்துள்ளது. புதிய மோட்டார் வாகனப் பதிவு சட்டம் குறித்து வரைவறிக்கை வெளியிடப்பட்டு, மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட வேண்டியதுள்ளது. ஒரு மாதத்துக்குள் அச்சட்டம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியதன் அடிப்படையில், எங்களது கோரிக்கைகளை கடிதம் வாயிலாக தெரியப்படுத்த உள்ளோம்.
பொதுமக்களும் இந்தச் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறிய வாகனங்களுக்கும் 20, 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனப் பயன்பாட்டாளர்களும் இதனால் பாதிப்புக்குள்ளாவர். கட்டண உயர்வு தொடர்பாக எந்தவிதமான ஆலோசனையும் மத்திய அரசு பெறவில்லை. 
லாரி உரிமையாளர்களின் நிலை பற்றி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நிர்வாகிகளுடன் சென்று நேரடியாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்.  வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக உயர்மட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT