தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கிடையே மோதல்

DIN


 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,  கடந்த ஜூலை 26  (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த கூட்டம் , நிர்வாக காரணங்களுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,  மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) மூ. இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகளும்,  துறை சார்ந்த அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தும் காலை  11.35 மணி வரை மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் இணை இயக்குநர் உள்ளிட்ட உயர்நிலை அலுவலர்கள் யாரும் கூட்டத்தை தொடங்கி வைக்க வரவில்லை.  பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா, வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) மூ.இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டரங்குக்கு வந்ததையடுத்து  கூட்டம் தாமதமாகத் தொடங்கியது.
 கூட்டத்தின் தொடக்கத்தில் பயிர்க் காப்பீடு மற்றும் படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகை சம்பந்தமாக விவசாயிகள் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு கூட்டுறவுத்துறை அலுவலர் இதுதொடர்பாக ஒரு விவசாயியின் பெயரை குறிப்பிட்டு, அவர் கூட்டம் நடத்தி உரிய விளக்கத்தை கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவுத் துறை அலுவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர் குறிப்பிட்ட அந்த விவசாயியின்  உறவினரான திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த முத்துராஜா என்பவர்,  திருப்புவனத்தைச் சேர்ந்த விவசாயி பாரத் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  வாக்குவாதம் முற்றியதில் முத்துராஜா, பாரத் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர், விவசாயிகள் இரு பிரிவாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
இதையடுத்து,  மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து முத்துராஜாவை கூட்டரங்கை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சிவகங்கை நகர் போலீஸார் முத்துராஜாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,  பயிர்க் காப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.  விவசாயிகளுக்கு நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அண்மைக்காலமாக அரசியல் சாயம் பூசப்படுவதாக விவசாயிகள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT