தமிழ்நாடு

இடநெருக்கடியில் புதுக்கோட்டை அருங்காட்சியகம்!

சா. ஜெயப்பிரகாஷ்

தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகமான "புதுக்கோட்டை அருங்காட்சியகம்' மிகக் கடுமையான இட நெருக்கடி மிகுந்த சூழலில் இயங்கி வருகிறது.
109 ஆண்டுகள் பழைமையான இந்த அருங்காட்சியகத்தை, விசாலமான கட்டட அமைப்பு, கூட்ட அரங்கு, ஒளி- ஒலி காட்சி அரங்கு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மனித குலத்தின் வரலாற்றை, பாடப் புத்தகங்களைத் தாண்டி, இணையவெளியைத் தாண்டி சான்றுகளுடன் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்புதான், அருங்காட்சியகங்கள்! இந்த வகையில் சென்னைக்கு அடுத்த பெரிய அருங்காட்சியகம் என்ற பெயரைப் பெற்றிருப்பது புதுக்கோட்டை அருங்காட்சியகம்.  
நகருக்குள் நுழையும்போதே திருக்கோகர்ணம் என்ற பகுதியில் சாலையோரத்தில், புதியவர்களுக்கு ஏதோவொரு பழைய கட்டடம் எனக் கருதும் வகையில்தான் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால் அத்தனையும் பொக்கிஷங்கள். 
பழம்பொருள்களின் கடல்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தனவாசல், குடுமியான்மலை, திருமயம் கோட்டை, நார்த்தாமலை பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பெற்ற கல்வெட்டுகள், கற்சிலைகள், மரப்படிமங்கள், மன்னர் காலத்துச் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் என ஏராளமான பொக்கிஷங்கள் இந்த  அருங்காட்சியகத்தில் குவிந்துக் கிடக்கின்றன. பலரும் அறிந்திராத போர்க் கருவிகள், தற்போதைய கலைஞர்களே கூட பார்த்திராத இசைக் கருவிகள், அரிய ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள், சுடுமண் படிமங்கள், திமிங்கலம், யானை, புலி முதல் குள்ளநரி வரையிலான விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், உலர் தாவரங்கள், உலோகப் படிமங்கள் என அருங்காட்சியகத்தில் உள்ள புராதன பொருள்களின் பட்டியல் மிக நீளமானது.
இடநெருக்கடியில் அருங்காட்சியகம்: ஓரிரு பெரிய, புதிய அரங்குகளைத் தவிர, மற்ற அரங்குகள் அனைத்தும் மிகவும் நெருக்கடியான சின்னஞ்சிறு அறைகளில், குனிந்தே செல்ல வேண்டிய சிறிய வாயில்களுடன் அமைந்திருக்கின்றன. இதனால், பார்வையாளர்களுக்கு கொஞ்சம் ஏற்படுகிறது என்றுகூட சொல்லலாம். குறிப்பாக, ஏராளமான பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் நின்று பார்க்க முடியாத அளவிலான குறுகிய அறைகளில்தான் மான்களின் எலும்புக்கூடு உள்ளிட்ட காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
விரிவாக்கம் செய்ய கோரிக்கை: மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெயருக்கு ஏற்ற வகையில், இதை விசாலமான கட்டடங்களுடன் மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள்.
மேலும், கூட்ட அரங்கு, ஒலி-ஒளிக் காட்சி அரங்கு உள்ளிட்ட நவீன வசதிகளும் இடம்பெற்றால் எதிர்காலத் தலைமுறைக்கு மனித குல வரலாற்றை மெய்நிகரில் காட்சிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே கண்டுகொள்ளப்படாத துறையாக தொல்லியல் துறை இருப்பதும், படிப்படியாக நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்து வருவதையும், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர்.
பெருநிதி என்றால் ஒரு மாவட்டத்துக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படுமாம். சுற்றுப்படி ஒவ்வொரு மாவட்டமாக பெரிய அளவிலான நிதி கிடைப்பதற்கு அடுத்த 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். இதையெல்லாவற்றையும் கடந்து, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பிரத்யேக முயற்சிகளை எடுத்தால் ஓரிரு ஆண்டில் விசாலமான தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்றை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வழங்க முடியும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT