புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக வலி நிவாரண மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 படுக்கைகள் கொண்ட இந்த மையமானது அடுத்த வாரம் முதல் செயல்படத் தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனை ஒன்றில் இத்தகைய சிறப்பு வலி நிவாரண மையம் அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சர்வதேச தரவுகளின்படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் மூன்று நிலைகளில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் மருந்துகள் மூலமாகவோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது கதிரியக்க சிகிச்சை மூலமாகவோ அதனை குணப்படுத்த இயலும். நான்காவது நிலையையும் தாண்டி புற்றுநோய் தீவிரமடைந்தால், சம்பந்தப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவது இயலாத காரியம்.
அவ்வாறு இறுதி நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உடலில் கடுமையான வலிகள் ஏற்படும். அனுதினமும் அத்தகைய வலிகளால் அவர்கள் அவதிப்படும் நிலை உருவாகும். அதனைத் தடுக்க தீவிர வலி நிவாரண மருந்துகள், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு அனுமதியின் கீழ் அத்தகைய மருந்துகள் வழங்கப்படுவது வழக்கம். அதேவேளையில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து நிவாரணம் அளிக்கும் சிறப்பு மையங்கள் எந்த அரசு மருத்துவமனையிலும் இதுவரை இல்லை.
இந்த நிலையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதியுதவியுடன் அத்தகைய வலி நிவாரண மையங்களை தமிழக அரசு மருத்துவமனைகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் அவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.15 லட்சம் செலவில் வலி நிவாரண மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:
அனைத்து நோய்களும் உடலில் ஏதோ ஒரு வகையில் வலியை ஏற்படுத்துகின்றன. அந்த நோயைக் குணப்படுத்தும் பட்சத்தில் அந்த வலி மறைந்துவிடுகிறது. ஆனால், தீவிர புற்றுநோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும்போது வலியை நிரந்தரமாகப் போக்க முடியாது. அதேவேளையில், அதற்கு மருந்துகள் மூலமாக நிவாரணம் அளிக்கலாம்.
அதுமட்டுமன்றி, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள், மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றை அளிக்கும்போது மனதளவில் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
அந்த நோக்கத்தில்தான் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிறப்பு வலி நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருத்துவர், நரம்பியல் மருத்துவர், உளவியல் ஆலோசகர், புனர்வாழ்வு நிபுணர், சிறப்பு செவிலியர்கள் ஆகியோர் அங்கு நாள்முழுவதும் நோயாளிகளைக் கண்காணிப்பர்.
புற்றுநோயாளிகளுக்கு மட்டுமல்லாது நாள்பட்ட கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கும் தேவையின் அடிப்படையில் இங்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து, ராயப்பேட்டை மருத்துவமனையின் நிலைய மருத்துவர் டாக்டர் ஆனந்த் பிரதாப் கூறுகையில், "வலி நிவாரண மையத்தில் வழக்கமான மருத்துவ சேவைகள் மட்டுமன்றி, நோயாளிகளின் மன நிலையை சீராக வைத்திருப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அந்த நிவாரண மையத்தில் மெல்லிசை ஒலிக்கச் செய்வதற்கான ஆடியோ வசதிகள், நோயாளிகள் படிப்பதற்காக பிரத்யேக புத்தகங்கள் மற்றும் நாளேடுகள் ஆகியவையும் தருவிக்கப்பட உள்ளன' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.