தமிழ்நாடு

சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தை எதிர்த்து குழந்தைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


ராமேசுவரம் கடல் பகுதியில் குறிப்பிட்ட தீவுகளை சுற்றிப்பார்க்கும் வகையிலான சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தை எதிர்த்து, ராமநாதபுரத்தில் மீனவர்கள் தங்களது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
       ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் உள்ள குருசடை உள்ளிட்ட 4 தீவுகளில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம்  செயல்படுத்தப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் கடலில் மீன்கள், நட்சத்திர மீன்கள், பவளப் பாறைகள் உள்ளிட்டவற்றை கண்டுகளிக்கும் வகையில் கண்ணாடி இழைப் படகுகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
     இத்திட்டத்துக்காக, தீவுகளைச் சுற்றிலும் மிதக்கும் பலூன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மிதக்கும் பலூன்கள் அமைப்பதால் தீவுகளுக்கு பாரம்பரிய மீனவர்கள் செல்வது தடைசெய்யப்படும் என புகார் எழுந்துள்ளது. எனவே, மிதக்கும் பலூன்கள் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி, அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை, ராமேசுவரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் முகாமில் தர்னாவில் ஈடுபட்டனர். ஆட்சியரின் சமரசத்துக்கு பின்னர் கலைந்து சென்றனர். இதையடுத்து, கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தோப்புக்காடு, வேதாளை, சின்னபாலம், குந்துகால், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் கலந்துகொண்டு, இச் சுற்றுலாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாரம்பரியமாக தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தங்களை மீண்டும் அனுமதிக்கக் கோரியும் முழக்கமிட்டனர்.
     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் வனத் துறையினரைச் சந்தித்தனர். அப்போது வனத் துறை அதிகாரிகள், கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மீனவர் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறினர். அதற்கு, எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று மீனவர்கள் கூறி கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT