தமிழ்நாடு

யதார்த்த வாழ்க்கையில் பட்டியலின மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை: நெல்லை அசோக் கொலை குறித்து முத்தரசன் 

DIN

சென்னை: பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தாலும், யதார்த்த வாழ்க்கையில் பட்டியலின மக்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு நெல்லை அசோக் கொலை சம்பவம் எடுத்துக்காட்டு என்று இ.கம்யூ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியான, இருபத்து மூன்றே வயதான அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தனது தாயோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அவர் கையிலிருந்த புல்லுக்கட்டு நடந்து சென்ற ஒருவர் மீது உரசி இருக்கிறது. தோழர் அசோக் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர். புல் உரசியவர் ஆதிக்க இடைநிலைச் சாதியினர். ஒரு சாதாரண சம்பவம், சாதியின் காரணமாக தகராறு ஆக்கப்பட்டுள்ளது. கண் முன்பு தாய் தாக்கப்பட, மகன் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். வன்கொடுமைச் சட்டத்தின்  பிரிவுகளில் புகாரைப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்திருந்தால், இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்காது. புகாரைச் சரியாகப் பதிவு செய்யாமலும், உடனடி நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தி, ஒரு படுகொலைக்கு காரணமாக இருந்த காவல் துறையின் அலட்சியம் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தற்போது கொலையில் சம்பந்தப்பட்டவர் பெயர்களை தாக்குதலுக்குள்ளான வர்கள் கொடுத்தால், அவ்வளவு பேரும் சம்பந்தப்படவில்லை, சரியானவர்களை கைது செய்து மற்றவர்களை விட்டுவிடுவோம் என ஒரு காவல் துறை அதிகாரி பேட்டியளித்துள்ளார். பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தாலும், யதார்த்த வாழ்க்கையில் பட்டியலின மக்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.

படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. தச்சநல்லூர் காவல் துறை அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், வேறொரு புலனாய்வு அதிகாரியை நியமித்து விசாரனை நடத்துமாறும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு உடனடியாக பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT