தமிழ்நாடு

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம்: புழல் சிறையில் தீவிரவாதிகளிடம் என்.ஐ.ஏ. விசாரணை

DIN


சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகளிடம் இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணி தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 253 பேர் இறந்தனர். ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு உலக நாடுகளை அதிர வைத்தது.
 இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, இங்கு சில ஆதரவாளர்கள் மறைமுகமாக உதவி வருவதால், அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைமுகமாக அந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நபர்களுக்கு, இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.
கோவையில் இருவர் கைது: முதல் கட்டமாக, கேரள மாநிலம் கொச்சி, காசர்கோடு பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களாக என கண்டறியப்பட்ட நபர்களிடம் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அடுத்ததாக, கோயம்புத்தூரில் கடந்த வாரம் திடீரென 7  இடங்களில் சோதனை செய்தனர். 
இந்தச் சோதனையில் இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக முகம்மது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு இருவரும் ஆள் சேர்ந்திருப்பதும், சமூக ஊடகங்கள் மூலம் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருப்பதும், இந்தியாவிலும் சதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.
புழல் சிறையில் விசாரணை: இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ராமநாதபுரம், வேலூர், சேலம் ஆகிய பகுதிகளில் ஹிந்து இயக்கத் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரிடம்  விசாரணை செய்வதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திங்கள்கிழமை வந்தனர்.
இதில் போலீஸ் பக்ருதீன் புழல் தண்டனை கைதிகள் சிறையிலும், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புழல் விசாரணைக் கைதிகள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்ததால் விசாரணை செய்ய வந்ததாக சிறைத் துறை அதிகாரிகளிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனராம். அதன் அடிப்படையில் 3 பேரிடமும் தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு, இங்குள்ள ஐ.எஸ்.ஆதரவாளர்கள், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரசாரம் ஆகியவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 3 பேரும் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த விசாரணையின் காரணமாக, சிறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT