தமிழ்நாடு

அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நீதித்துறையில் வழக்குரைஞர்களின் பங்கு முக்கியமானது: உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

DIN


பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நீதித்துறையில் வழக்குரைஞர்களின் பங்கு முக்கியமானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். 
 தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் இணையதளம் மூலம் வழக்குரைஞராகப் பதிவு செய்தல் மற்றும் காவல்துறையின் தடையின்மைச் சான்று  பெறும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவும், 826 வழக்குரைஞர்களின் பதிவு  நிகழ்ச்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது. 
இந்த விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி இந்திராபானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், என்.கிருபாகரன், ஜி.கே.இளந்திரையன், ரா அமைப்பின் முன்னாள் தலைவர் பி.கே.ஹோர்மிஸ் தாரகன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:
நீதித்துறை ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். பொது மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது நீதித்துறை தான்.இதில் வழக்குரைஞர்களின் பங்கு முக்கியமானது. நீதிமன்றத்தின் அதிகாரிகளான வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக்கூடாது. நீதித்துறை தான் ஜனநாயகத்தின் பலம் . உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளின் போது, தேவையற்ற ஒத்திவைப்புகளை கோராமல், வாதிட முயற்சி செய்யுங்கள்.  உங்கள் வாத திறமையின் மூலம் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யுங்கள். மேலும், நீங்கள் நடத்தும் வழக்குகளால் அப்பாவி ஒருவர் கூட பாதிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ பேசியதாவது: நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் வழக்குரைஞர்கள் இருக்க வேண்டும். வழக்குத் தொடர இயலாதவர்களுக்கு இலவசமாக சேவை செய்யுங்கள். வழக்குரைஞர் தொழில் பணம் ஈட்டும் தொழில் அல்ல. வழக்காடிகளுக்கு நம்பிக்கையாகவும், விளிம்பு நிலையினருக்கு பாதுகாப்பாகவும் வழக்குரைஞர்கள் இருக்க வேண்டும். தற்போது அதிகப்  பெண்கள் சட்டம் படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர். 
முன்னதாக இணையதளம் மூலம் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் நடைமுறையை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியும், காவல்துறை சான்று சரிபார்ப்பு முறையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயும் தொடங்கி வைத்தனர். 
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT