தமிழ்நாடு

மருத்துவர்களின் கட்டணம்- ஆலோசனை நேரம்:  ஆன்லைனில் அறியும் வசதி விரைவில் அறிமுகம்

ஆ. கோபிகிருஷ்ணா

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் நேரம், அதற்காக அவர்கள் பெறும் கட்டணம் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

தமிழக மருத்துவ கவுன்சில் சார்பில்  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில்,  முதல்கட்டமாக சென்னையில் உள்ள மருத்துவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், அதன் பின்னர், படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களின் தகவல்களும் அதில் சேர்க்கப்படும் என மருத்துவக் கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கென சிறப்பு மென்பொருள் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் தற்போது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், மருத்துவ சேவையில் 
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது  என  அவர்கள் கூறியுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 60 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகள் உள்ளன. அதில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். 
அரசு மருத்துவர்களில் சிலரும் மாலை வேளைகளில் தனியார் கிளினிக்குகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவருமே தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு உரிமம் பெற்ற மருத்துவர்களாவர்.
பொதுவாக, தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் எந்த நேரத்தில் மருத்துவர்கள் வருவார்கள்? எவ்வளவு கட்டணமாகப் பெறுகிறார்கள்? என்பன குறித்த விவரங்கள் பொதுத் தளங்களில் வெளியிடப்படுவதில்லை. 

 சில இடங்களில் சிகிச்சைக்கு தகுந்தாற்போல வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் நோயாளிகளுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
இது ஒருபுறமிருக்க, அவசர சிகிச்சை தேவைப்படும்போது குறிப்பிட்ட மருத்துவமனையிலோ அல்லது கிளினீக்கிலோ மருத்துவரின் இருப்பை உடனே அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஒன்று தொலைபேசியில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்; அல்லது, நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் மருத்துவரின் இருப்பை தெரிந்து கொள்ள முடிகிறது.  இந்தச் சூழலில் நோயாளிகளின் இந்த அசெளகரியத்தை கருத்தில் கொண்டு புதிய வசதியை உருவாக்கித் தரத் திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் இணையதளப் பக்கத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:
புதிய மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டவுடன் படிப்படியாக மருத்துவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். அவற்றை ஒவ்வொரு துறையாக வகைப்படுத்துவதன் மூலம் பொது மக்கள், தங்களது வசிப்பிடத்துக்கு அருகே பொது மருத்துவர்கள், இதய நிபுணர்கள், முடநீக்கியல் நிபுணர்கள், சர்க்கரை நோய் மருத்துவர்  போன்றோர் எவர் எவர்   உள்ளனர்  என்பதை அறிந்துகொள்ளலாம். 

மருத்துவர்கள் ஆலோசனைக்காக எவ்வளவு கட்டணமாக பெறுகிறார்கள், எந்த நேரத்தில் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள், மருத்துவமனை முகவரி உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். மருத்துவர்களின் புகைப்படங்களை பதிவேற்றுவது குறித்தும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக  அனைத்து மருத்துவர்களிடமும், தங்களது தகவல்களை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். 

இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும்போது பொது மக்களும், நோயாளிகளும் மருத்துவ சேவைகள் குறித்த விவரங்களை எளிதில் பெற முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT