தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

DIN


காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிதாக அணை கட்டுவதற்கான அனுமதியைக் கோரி அதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசின் காவிரி நதிநீர் வாரியமானது, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. 
இந்தப் பிரச்னையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
கர்நாடகத்தின் இந்தச் செயலானது, காவிரி நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறைக்கு உரிய உத்தரவை வழங்கிட வேண்டும்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், தனது எதிர்ப்பையும் பதிவு செய்து கொண்டே வருகிறது.
தமிழகத்தின் அனுமதியில்லை: காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிலும், காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவிலும் மேக்கேதாட்டுவில் அணை தொடர்பான விஷயங்கள் ஏதும் வரையறுத்துக் கூறப்படவில்லை. 
மேலும், காவிரி நதிநீர் படுகை மாநிலங்களாக இருக்கக் கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிடம் அணை திட்டம் தொடர்பாக கர்நாடகம் எந்த முன் அனுமதியையும் பெறவில்லை. காவிரி நதிக்கு மேல்புறம் இருக்கக் கூடிய மாநிலங்கள், அதாவது கர்நாடகம் போன்றவை நதியின் குறுக்கே ஏதாவது அணைத் திட்டங்களைச் செயல்படுத்தினால் அது நதிக்கு கீழ்புறம் இருக்கக்கூடிய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 
இந்த விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னையை கடந்த 15-ஆம் தேதி தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.
அமைச்சரவைக்கு உத்தரவிடுங்கள்: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ள திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை நிராகரிக்க வேண்டும். இதற்குரிய உத்தரவை அந்தத் துறைக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும்.
கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்பிட மத்திய நீர்வள ஆணையத்துக்கு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தரவிடலாம். 
மேலும், காவிரி படுகையைச் சேர்ந்துள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. 
இதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும். 
இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டால் தங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்போம் என்று தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT