தமிழ்நாடு

பரோல் கோரிய வழக்கு: ஜூலை 5-இல் நேரில் ஆஜராகி வாதிட நளினிக்கு அனுமதி

DIN


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினி, 6 மாதம் பரோல் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதியளித்த உயர்நீதிமன்றம், அவரை வரும் ஜூலை 5-ஆம் தேதி ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 
 சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனுவில், எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே, எனக்கு 6 மாத பரோல் வேண்டும் என சிறைத் துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தேன். அந்த மனுவைப் பரிசீலிக்கப்படவில்லை. 
மேலும், எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2000-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக அரசு 3 ஆயிரத்து 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. ஆனால் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத காலம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளன. எனவே, எனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், நளினி விரும்பினால் காணொலிக் காட்சி மூலம் சிறையில் இருந்து ஆஜராகி வாதிடலாம், அவ்வாறு ஆஜராகி வாதிட  விருப்பமா என நளினியிடம் கேட்டுத் தெரிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், காணொலிக் காட்சி மூலம் ஆஜராக விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிடவே விரும்புவதாகவும் வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு நளினி எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், நளினியை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு அரசுத் தரப்பில், நளினி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டி வரும். 50 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டியது வரும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நேரில் ஆஜராகி வாதிட கோரும் நளினியின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதே நேரம், நளினியை ஆஜர்படுத்தும் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அரசுத் தரப்பில் கூறினாலும், அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே நளினியை பாதுகாப்புடன் வரும் ஜூலை 5-ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு, உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நளினியும் சிறை விதிகளை மீறாமல், போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT