முகப்பு
தமிழ்நாடு

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: சந்தை நிபுணர்கள் கணிப்பு

தங்கத்தின் தொடர் விலை ஏற்றத்தால், சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை மேலும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:22 AM
பகிர்:



தங்கத்தின் தொடர் விலை ஏற்றத்தால், சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும் வகையில்  வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று  சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 

800-900 டன் தங்கம் இறக்குமதி: பண்டைய காலம் முதல் தற்போது வரை தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் சிறிதும் குறைவின்றி அப்படியே தொடர்கிறது. மேலும், இது  மக்களின் தனிப்பட்ட  செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில் மக்கள் தங்கத்தை வாங்கி ,  அணிந்து மகிழ்கின்றனர். முன்பெல்லாம் மக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருந்ததால், தங்கம் நுகர்வு குறைவாக இருந்தது. அதன் பிறகு, மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தபோது, தங்கத்தின் நுகர்வும் அதிகரித்தது. தற்போது உலகில் நடைபெறும் தங்கம் நுகர்வில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது ஆண்டுக்கு 800 டன் முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம்: தங்கம் நுகர்வு அதிகரித்து வருவதுபோல, அதன் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஜூன் 1-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன்  ரூ.25,176 ஆகவும் இருந்தது. அதன்பிறகு, விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி  ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. அதைத் தொடர்ந்து, கடந்த 25-ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய நாளில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ. 26,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு  கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ரூ.3,303-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை 1,266 டாலராக கடந்த மே மாதம் இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக அதிகரித்து கடந்த 22-ஆம் தேதி 1,403 டாலராக உயர்ந்தது. தங்கத்தின் தொடர் விலை உயர்வால், திருமணம் உள்பட சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நகை வாங்க வந்த பெண்கள்  சுமதி, லட்சுமி ஆகியோர் கூறியது: 

திருமணத்துக்காக தங்கம் வாங்க  வந்தோம். ஆனால், பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.26 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. எங்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?: சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் போக்கில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில்  கணிக்கப்படுகிறது. அதுவே இந்த தற்போதைய விலை ஏற்றத்துக்கு காரணம். அதே சமயம், அமெரிக்காவில் 2008-09-ஆம் ஆண்டுகளில்  நிதி சார்ந்த சிக்கலுக்குப் பிறகு, அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை படிப்படியாக உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் மூலமாக சரிவடைந்த  பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டில்,  அமெரிக்க ஃபெடரல் வங்கியின் குறிக்கோள் பணவீக்கத்தை குறைப்பது,  வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கையை  குறைப்பது என்று இரண்டு இலக்குகளாக இருந்தது. வேலைவாய்ப்பின்மை 2008-இல் 10 சதவீதமாக இருந்ததை 4 சதவீதத்துக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டு இலக்குகளை வைத்தே  ஃபெடரல் வங்கி செயல்பட்டது. இதன்மூலம் ஓரளவு வேலைவாய்ப்பு பெருகியது. அதுபோல, பணவீக்கமும் 2 சதவீதத்தை கடந்த ஆண்டு இறுதியில் எட்டியது. இந்த இலக்கை அடைந்தபோது, டாலர் வலுவாக மாறியது. இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.  2019 ஜனவரி முதல் மே மாதம் வரை பணவீக்கம் சற்று கீழ் இறங்கிய நிலையில், இலக்கை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. அதனால் இதற்கு தீர்வு காண நடவடிக்கையில் அமெரிக்க இறங்கியுள்ளது.
இதற்கிடையில்,  கடந்த வாரம் எஃப். ஓ.எம்.சி. (ஊங்க்ங்ழ்ஹப் ஞல்ங்ய் ம்ஹழ்ந்ங்ற் இர்ம்ம்ண்ற்ற்ங்ங்) கூட்டத்தில் , அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த கூட்டம் முடிந்தபின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. ஆனாலும் வரும் மாதங்களிலோ அல்லது இந்த  ஆண்டிற்குள்ளாகவோ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான தேவை ஏற்பட்டால் , அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்ற விதத்தில் அறிக்கை இருந்தது.  வட்டி விகிதம் குறைத்தால் டாலர் பலவீனம் அடையும். முதலீடு தங்கத்தை நோக்கி திரும்பும். இதுதான் தற்போது நடைபெறுகிறது. 

விலை இறங்க வாய்ப்பு குறைவு: இதுகுறித்து சந்தை நிபுணர் ப.ஷியாம் சுந்தர் கூறியது: பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பாக சீனா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் 2019-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் மீது முதலீடு இருமடங்கு அதிகம் செய்துள்ளது. சீனா, ரஷியா நாடுகளில் பொதுவான கரன்சியான டாலரை விற்று தங்கமாக மாற்றி கொள்கின்றனர். 
சீனா-அமெரிக்க இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பை குறைத்து கொள்கின்றன.  இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற  நிலை உள்ளது. மேலும், உலக பொருளாதார மொத்த  வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்தில் இருந்து 3.5 ஆக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்)  கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் முதலீடு அதிகரித்து, விலையும் உயர்கிறது.   ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கத்தின் விலை கடந்த 4 ஆண்டுகளாக 100 முதல் 150 டாலர் வரை வித்தியாசத்தில் ஏற்ற இறக்கம் இருந்தது. அதாவது  கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு முறை தங்கம் விலை உயரும் போதும், சர்வதேச அளவில் டிராய் அவுன்ஸ் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,350 அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிட்டு மீண்டும்  கீழிறங்கி  ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே இருந்து வந்தது. 

ஆனால், இந்த முறை அந்த விலையைத் தாண்டி  மேல்நோக்கிச் செல்வதால் இனிவரும் காலங்களில்  1,350 டாலர் என்பது குறைந்தபட்ச ஆதரவு விலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரண்டு நாளில் 130 டாலர் உயர்ந்துள்ளது. தங்கம் விலை இறங்க  வாய்ப்பு மிக குறைவு என்றார்  ப.ஷியாம் சுந்தர்.
ரூ.30 ஆயிரத்தைத் தொட வாய்ப்பு: தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியது:  அமெரிக்க-ஈரான் இடையே போர் பதற்றம் உள்பட  மூன்று காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. அதன் தாக்கமே உள்நாட்டில் காணப்படுகிறது.  ஒரு மாதத்தில் பவுன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டுக்குள் ரூ.30 ஆயிரத்தைத் தொடுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றார்.
என்ன செய்யலாம்


ஆபரணத் தேவைக்கு வாங்குபவர்களைத் தவிர மற்றவர்கள் அரசு வெளியீடும் தங்கப் பத்திரங்களில் (ந.எ.ஆ) முதலீடு செய்லாம். இந்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. 2019-20 சீரிஸ் -2 பத்திரம் வெளியிடப்படவுள்ளது.  நிகழாண்டில் ஜூலை 8 முதல் 12 வரை முதலீடு செய்யலாம்.

 இதுபோல, சீரீஸ் 3, 4 என்று வெளியிடப்படும் பத்திரத்தில்  முறையே ஆகஸ்ட், செப்டம்பரில் முதலீடு செய்யலாம். இது தொடர்பான விவரங்கள் ஆர்.பி.ஐ. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.