இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் பலமடங்கு அதிகரித்து விட்டது. வனத்தையொட்டிய பகுதியில் வாழ்ந்த மயில்கள், தற்போது நகரப் பகுதிக்குள் சுற்றித் திரிகின்றன. சாலைகளில் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக பாய்ந்தோடும் மயில்கள் வாகனங்களில் மோதி
உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. பட்டியலினப் பறவை என்பதால், அவற்றை கட்டுப்படுத்த வழியில்லை என்கின்றனர் வனத் துறையினர்.
வண்ண மயில்களைக் காண்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேரின்பத்தைத் தரக்கூடியதாகும். அவற்றிலும் தோகை விரித்தாடும் ஆண் மயில்களை பார்ப்பதே கொள்ளை அழகு. மழை வருவது மயிலுக்கு தெரியும் என்பதற்கு உதாரணம், வனத்தில் இருந்தாலும் அவற்றின் அகவுக் குரல் அருகில் உள்ள கிராமங்கள் வரை எதிரொலிக்கும். இவ் வகையான மயில்கள் எண்ணிக்கை 30, 40 ஆண்டுகளுக்கு முன் குறைந்த அளவிலே இருந்தது. அதற்கு காரணமாக கூறப்படுவது உடும்புகள் தான். அவை மயில்களின் முட்டையை உடைத்து சாப்பிட்டு விடும். அதேபோல் வங்காநரி, காட்டுப் பல்லிகள் போன்றவையும் மயிலை அழிக்க வல்லதாக இருந்தன.
குறிப்பிட்ட வேலிகளைத் தாண்டி கிராமப்புறங்களுக்குள் அவை வராது. சீமை கருவேல மரங்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலேயே மயில்களின் இனப்பெருக்கம் இருக்கும். விவசாயிகளின் பயிர்களைச் சேதப்படுத்தி, அதை உண்டு மகிழ்ந்த அப் பறவைகள், தற்போது உணவு, தண்ணீருக்காக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை படையெடுக்கத் தொடங்கி விட்டன. கோழிகள் போல் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் அவை, சாலையைப் பறந்து கடக்கும்போது வாகனங்களில் மோதி உயிரிழக்கின்றன.
இதன் மூலம் காயமடைவோரும் உண்டும். மற்ற பறவை, விலங்கினங்களைப் போல், மயில்களைக் கொன்றால் வனத் துறை சட்டப்படி கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடும் என்பதால், யாரும் அவற்றை கொல்வதற்கு முயற்சிப்பதில்லை. தேசிய பறவை என்ற தேசப்பற்றும் இதற்கு ஒரு காரணம் எனலாம். தமிழகத்தில், ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், நெல்லை, சிவகங்கை, தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக வனத் துறையால் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், எண்ணிக்கை விவரங்களை அத் துறையினரால் கணக்கிட முடியவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், தும்மங்குறிச்சி, பெரியூர், ஆட்சியர் அலுவலகம், நாமக்கல்- திருச்செங்கோடு புறவழிச் சாலை போன்ற இடங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதை வாகனங்களில் செல்வோர் ஆர்வமுடன் பார்க்கும் நிலை உள்ளது.
மனிதர்களைக் கண்டால் அவை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மின்னல் வேகத்தில் ஓட்டம் எடுக்கின்றன. அவற்றை தாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரித்து அனுப்புகின்றனர்.
நாமக்கல் சுற்று வட்டாரத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து, மாவட்ட உதவி வனப் பாதுகாவல் என்.சக்திவேல் கூறியது; யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளைக் கணக்கெடுத்து விடலாம். மயில்கள் எண்ணிக்கையை கணக்கெடுப்பது என்பது கடினம். அவை பறவை என்பதால், இன்று இங்கிருந்தால், நாளை வேறொரு இடத்தில் இருக்கும். காக்கை, குருவியை எவ்வாறு கணக்கிட முடியாதோ, அதேபோலத் தான். மயில்கள் மற்ற பறவைகள்போல் அதிக உயரம் பறக்காது, வேகமாக ஓடும். தற்போதைய காலக்கட்டத்தில், அவற்றின் இனப்பெருக்கம் என்பது அதிகரித்திருப்பது உண்மை தான்.
உடும்பு, நரி, காட்டுப் பல்லி போன்றவை குறைந்ததால், மயில்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வனத்தையொட்டி விவசாய பயிர்களை அழித்து வந்த அவை, தற்போது கிராமங்களுக்குள் வருகின்றன. தேசியப் பறவை என்பது மட்டுமின்றி, பட்டியலினப் பறவைகளில் ஒன்றாக உள்ளதால், அவற்றை தாக்குவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அதை தொந்தரவு செய்யாதபோது, தானாகவே அடர்ந்த பகுதிக்குள் ஓடி விடும். மயில்கள் கடக்கும் சாலைப் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பது நல்லது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.