முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, உரலும், உலக்கையும் பிரிக்க முடியாத சாதனங்களாக இருந்தன. இயந்திரத்தனம் இல்லாமல் கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிட்டு வாழ்ந்தனர் முன்னோர்கள். வீடுகளில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் உலக்கை முதலிடம் பிடிக்கும்.
கால மாற்றம் மக்களைச் சோம்பலுக்கு தள்ளியது. உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் போன்றவை அன்றாட சமையல் பணியை மேற்கொண்டு வந்த பெண்களை ஆரோக்கியமாக வைத்திருந்தன. அறிவியல் மாற்றம் ஆரோக்கியத்தை பின்னுக்குத் தள்ளி பலரையும் மருத்துவமனையை நோக்கி ஓட வைத்துள்ளது.
மிக்ஸி, கிரைண்டர் வருகைக்கு பின், சமையலுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் பயன்பட்ட உரல், உலக்கை போன்றவை மூலைக்குச் சென்றுவிட்டன. ஆனால், தற்போதும் முக்கிய திருவிழாக்களில் உலக்கை முதன்மை வியாபாரப் பொருளாக உள்ளது. அதிலும், நாமக்கல் புதன்சந்தை உலக்கையை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். திருச்சி -புதுக்கோட்டை சாலையில் உள்ள வீரப்பூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் பொன்னர் - சங்கர் திருவிழா நடத்தப்படும்.
சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வசிக்கும் கொங்கு வேளாளர் இன மக்கள் இத் திருவிழாவில் அதிகம் கூடுவர்.
விழாவையொட்டி நடைபெறும் சந்தையில், நாமக்கல் புதன்சந்தையில் இருந்து செல்லும் உலக்கைகள் அதிகளவில் விற்பனையாகும். இதற்காக, 5 ஆயிரம் உலக்கைகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரியலூர் கலியபெருமாள் கோயில் விழா, காளிப்பட்டி கந்தசாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் விழாக்களின்போது உலக்கை விற்பனை அதிகளவில் நடைபெறும்.
உலக்கையை சமையல் தேவைகளுக்குப் பயன்படுத்த மக்கள் வாங்குவதைவிட, சடங்கு நிகழ்வுகளுக்காகவே மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வர்.
நான்கு தலைமுறைகளாக உலக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே பி.கொசவம்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஜான்சவரிமுத்து கூறியது:
இத் தொழிலை 4 தலைமுறையாகச் செய்து வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில், நாங்கள் மட்டுமே உலக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். வேறு யாரும் செய்வதாகத் தெரியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், உலக்கை தயாரிப்பு அதிகம் நடைபெறும். ஏனென்றால், அப்போதுதான் வட மாவட்டங்களில் திருவிழாக்கள் கிராமம், நகரம் வாரியாக தொடர்ந்து நடத்தப்படும். அங்கு கூடும் சந்தைகளுக்கு உலக்கைகளைக் கொண்டு சென்று விற்பனை செய்வோம்.
இந்த உலக்கைகள், வாகை, வேலம், வேம்பு, பூஞ்சை, கருங்காலி, ஆச்சம் உள்ளிட்ட மர வகைகளில் தயார் செய்யப்படுகின்றன. மொத்தமாக மரங்களை வாங்கி, அவற்றை திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள மர அறுவை ஆலையில் கொடுத்து, 5 அடி, 4 அடி, 3 அடி என மூன்று விதமாக அறுத்து எடுப்போம். பின்னர், அவற்றைக் கொண்டு வந்து, அரிசி, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை குத்துவதற்கு ஏற்றாற்போல், ஒரு பக்கம் சமமாகவும், மறுபக்கம் சற்றுத் தாழ்வாகவும் இரும்புக் கப்புகளைப் பொருத்துவோம்.
இவற்றில், 5 அடி உயரம் கொண்டது ரூ.400 வரையிலும், 4 அடி உயரம் ரூ.250, 3 அடி உயரமுள்ளது ரூ.150 வரையிலும் விற்பனை செய்கிறோம். மொத்தமாக எங்களிடம் வாங்கிச் சென்று ரூ.100 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் உண்டு. வரும் 14-ஆம் தேதி, திருச்சி மாவட்டம், வீரப்பூரில் பொன்னர் - சங்கர் திருவிழா நடைபெறுகிறது.
இங்குவரும் கொங்கு சமுதாய மக்கள், நாயக்கர்கள், வன்னியர் சமுதாயத்தினர் தங்களுடைய வீட்டின் பல்வேறு சடங்கு நிகழ்வுகளுக்கும், உலக்கையை வாங்கிச் செல்வர். பெரும்பாலும், 5 அடி உலக்கைகளே அதிகம் விற்பனையாகும். தற்போது, 5 ஆயிரம் எண்ணிக்கையில் உலக்கை தயாராகி வருகிறது.
ஓர் உலக்கையானது 5 முதல் 7 கிலோ வரை எடையிருக்கும். ஒரு நாளில் 30 உலக்கைகளில் கப்புப் பொருத்தி, அவற்றின் மீது கருப்பு நிற வண்ணம் பூசி, பாலிஷ் செய்து தயாராக்குவோம். உலக்கை என்பது சாதாரண ஒரு கருவி இல்லை.
நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய, நமக்கு சாதகமான ஒரு பொருள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.