தமிழ்நாடு

மக்களை மயக்கி வாக்குகளை  பறிக்கும் எடப்பாடி அரசு: கே.எஸ்.அழகிரி சாடல் 

வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விவகாரத்தில் மக்களை மயக்கி வாக்குகளை  பறிக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.. 

DIN

சென்னை: வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விவகாரத்தில் மக்களை மயக்கி வாக்குகளை  பறிக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து சுமார் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படுகிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 1200 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. தமிழக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிற ஒருசில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களை கவருவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. நிதியிலிருந்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற கொடுக்கப்படுகிற நிதிக்கு பதிலாக அரசு நிதியிலிருந்தே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை விட கொடூரமான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத மக்கள் விரோத அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இணைந்து இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய - மாநில அரசுகள் வழங்குகிற உதவி நிதி எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது என்பதை வாக்காளர்கள் அறியாதவர்கள் அல்ல.

தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கிறது. இது மாநில மொத்த உற்பத்தியில் 23 சதவீதமாகும். தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூபாய் 55 ஆயிரம் கடன் சுமையை அ.தி.மு.க. அரசு சுமத்தியிருக்கிறது. கடனுக்காக வட்டி மட்டும் ஆண்டுதோறும் 33 ஆயிரத்து 226 கோடி ரூபாய் செலுத்தி வருகிறது. இத்தகைய திவாலான நிலையில் இருக்கிற அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் வறுமையைப் போக்குவதற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதால் இத்தகைய தற்காலிக கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் 71 லட்சம் சிறு, குறு விவசாயிகள் இருக்கிறார்கள். இதில் குத்தகை விவசாயிகள் 25 லட்சம் பேர் இதில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோயில் நில குத்தகைதாரர்கள் மூன்றரை லட்சம் விவசாயிகளும் இருக்கிறார்கள். இப்படி பார்க்கிற போது பாதி விவசாயிகளுக்கு உதவித் தொகை மறுக்கப்பட்டு வருகிறது.

வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக கூறுகிற தமிழக அரசிடம் அதற்கான புள்ளி விவரம் இருக்கிறதா ? வறுமைக் கோட்டிற்கு கீழாக வாழ்பவர்களுக்கு என்ன அளவுகோல் ? இவர்கள் விவசாயத் தொழிலாளர்களா அல்லது வேறு எந்த வகை தொழிலாளர்கள் ? இதை அறிந்து கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டதா ? ஏனோ தானோ என்று தேர்தல் நெருங்குகிற நேரத்தில் மக்களை மயக்கி, உதவித் தொகை வழங்கி வாக்குகளை  பறிக்கிற முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT