தமிழ்நாடு

10 ஆண்டுகளாக அணைகள் தூர்வார செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?: விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளைத் தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த மனுவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு 1 மற்றும் 2, முக்கூடல் ஆகிய அணைகளைத்  தூர்வார வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். 
அதேபோல, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை, கொடிவேரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சாத்தனூர் ஆகிய அணைகளில்10 முதல் 20 அடி வரை மணல் சகதி, களிமண் தேங்கியுள்ளதால் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. 
அணைகளைத் தூர்வாரவும், பராமரிக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 11 அணைகளையும் தூர்வார உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை அணைகள் உள்ளன?, தமிழக அணைகள் கட்டப்பட்டபோது அவற்றின் கொள்ளளவு எவ்வளவு, தற்போதைய கொள்ளளவு எவ்வளவு?, விவசாயிகள் மற்றும் தனியாரைக் கொண்டு தூர்வார வாய்ப்புள்ளதா?, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது?, கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளைத் தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது?, குடிமராமத்து பணி மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். 
மேலும், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி அணைகளைத் தூர்வார வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை செயலர், தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT