தமிழ்நாடு

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு

DIN


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அகற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், பொதுமக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து சாலைகள் அமைக்கப்படுகின்றன. அந்தச் சாலைகளைத் தோண்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிக் கம்பங்களை அமைக்கின்றனர். இது தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். கொடிக் கம்பங்கள் நடுவதற்காக சாலைகள் தோண்டப்படுவதைக் கட்டுப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. மேலும் இதுபோன்று கொடிக் கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, பொது இடங்களில் அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்களை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58 ஆயிரத்து 172 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், 799 கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றியது தொடர்பாக 21 மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியற்ற கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்ட 21 மாவட்டங்களைத் தவிர, எஞ்சிய சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அகற்றவும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT