தமிழ்நாடு

பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது

DIN


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விவசாய இடத்தில் நடந்து வந்த பொழுதுபோக்கு விடுதியில் நேற்று தடை செய்யப்பட்ட போதை மருந்து மற்றும் மதுவுடன் நடந்த விருந்தில் பங்கேற்ற 159 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் இவர்கள் ஆட்டம், பாட்டம் மற்றும் ரகளையிலும் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து நள்ளிரவில் விடுதியை சுற்றி வளைத்தக் காவல்துறையினர், மிதமிஞ்சிய போதையில் இருந்த 159 இளைஞர்களையும் கைது செய்தனர்.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT