தமிழ்நாடு

உதகை மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: ஆளுநர் புரோஹித் பங்கேற்பு

DIN


உதகை கோடைப் பருவத்தின் முக்கிய விழாவான உதகை மலர் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
5 நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிவைக்கிறார். இந்தக் கண்காட்சியையொட்டி, சுமார் ஒன்றரை லட்சம் காரனேஷன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடத்தின் தோற்றம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 10 ஆயிரம் லில்லியம், ஆர்க்டிக் மலர்களைக் கொண்டு மலர்க் கூடையும், கண்ணாடி மாளிகை எதிரே 5 ஆயிரம் மலர் தொட்டிகளால் பிரமாண்ட மலர் வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளன. 
இந்தக் கண்காட்சிக்காக அரசினர் தாவரவியல் பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பல வண்ண மலர்கள் காட்சி மாடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 
அதேபோல, பூங்காவிலுள்ள மலர் பாத்திகளில் இன்கா மெரிகோல்டு, பிரெஞ்சு மெரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, சால்வியா, பிகோனியா, ஆஸ்டர், பால்சம், ஓரியண்டல் லில்லி, கிரசாந்திமம், சினரேரியா, கிளாக்சோனியா உள்ளிட்ட வெளிநாட்டு மலர் ரகங்களுடன் அரிய வகை மலர் ரகங்களான ரெனன்குலஸ், டியூப்ரஸ் பிகோனியா, பாயின் சிட்டியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களும் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியின் தொடக்க விழாவில் வேளாண்மைத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள்துறை இயக்குநர் சுப்பையன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு,  சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட செயல் இயக்குநர் அமர் குஷ்வாஹா, இன்கோ மேலாண்மை இயக்குநர் வினித், தமிழ்நாடு தேயிலைக் கழக மேலாண்மை இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வனப் பாதுகாவலர் கே.கே.கெளஷல், மாவட்ட வன அலுவலர்கள் குருசுவாமி, சுமேஷ் சோமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் பாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
இந்த மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி (மே 17) தொடங்கி  ஐந்து நாள்கள் நடைபெற உள்ளது. நிறைவு நாளான 21-ஆம் தேதி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.  கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT