தமிழ்நாடு

கைதுக்குப் பயப்படவில்லை... என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல்ஹாசன் 

DIN


சென்னை: என்னைக் கைது செய்தால் எனக்கு ஒன்றுமில்லை, பதற்றம்தான் அதிகரிக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோட்சேவைத் தொடர்புபடுத்தி நான் கூறியதில் தவறான கருத்துகள் எதுவும் இல்லை. அது பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டது. இப்போது அதைத் திடீரென கவனிப்பது அவர்களின் செüகரியத்துக்காகக் கவனிப்பது  போல் தோன்றுகிறது. இதே கருத்தை மெரீனாவில் கிட்டத்தட்ட  15 நாள்களுக்கு முன்புகூட கூறியிருக்கிறேன். அப்போது தன்னம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் எது கிடைக்கிறதோ அதைப் பிடித்துக் கொண்டு விவாதம் நடத்துகின்றனர்.

என் கருத்தால் சமூகத்தில் பதற்றம் எதுவும் உருவாகவில்லை. அப்படி உருவாக்குகின்றனர் என்பது தான் என் குற்றச்சாட்டு. 3 நாள்கள் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் அவர்கள் உருவாக்கிவிட்டதுதானே தவிர, வேறொன்றுமில்லை.

பிரதமருக்குச் சரித்திரம் சொல்லும்: ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவருக்குப் பதில் சொல்வதற்கு சரித்திரமும், சரித்திர ஆசிரியர்களும் இருக்கின்றனர். மதநல்லிணக்கத்தை ஆதரிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் என்னை ஆதரிக்காததற்கு அவர்களுக்கு வேறு தேவை இருக்கிறது. அதனால், ஆதரிக்காமல் இருக்கலாம்.

கைதுக்குப் பயப்படவில்லை: இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரியிருப்பதால் கைதுக்குப் பயப்படுவதாக அர்த்தமில்லை. என்னைக் கைது செய்தால் எனக்கு ஒன்றுமில்லை. கைது செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை, அறிவுரை. அதைச் செய்யாமல் இருப்பது நல்லது.

கோட்சே குறித்து இப்போது பேச வேண்டிய தேவை கண்டிப்பாக இருக்கிறது.  மறுபடியும் காந்தியைப் பற்றிய நல்ல விஷயங்கள் வெளியே வருகின்றன.  அதை வெளிக் கொணரவும், சரித்திரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் சரித்திரத்தை நினைவு கொள்வது நல்லது.

சூலூரில் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்: சூலூரில் எங்களுக்குக் கடைசி நாள் பிரசாரம்.  ஆனால், அதை தடை செய்துள்ளனர். பதற்றச்சூழல் நிலவும்பட்சத்தில் ஏன் சூலூரில் தேர்தலைத் தள்ளிப்போடக் கூடாது என்பது எங்களுடைய பரிந்துரை.

என் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறார்.  அது அவரது குணாதிசயம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மே 23-ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்குச் சோனியா காந்தி என்னை அழைக்கவில்லை.

அரசியலின் தரம் குறைந்துவிட்டது: அரசியலின் தரம் குறைந்துவிட்டது. கோட்சே குறித்து நான் பேசியதற்காக என்னை நோக்கி செருப்பு வீசியுள்ளனர். செருப்பு வீசுவதாலோ, கல் வீசுவதாலோ என்னை அச்சுறுத்தி பணிய வைத்துவிட முடியாது என்றார் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT