தமிழ்நாடு

மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு

DIN

தமிழகத்தில் அடுத்த மாதம் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்கள்எந்தெந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணித் தலைமையிடம் ஏற்கெனவே தலா ஒரு மாநிலங்களவை இடங்களை தேர்தல் கூட்டணி ஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்துள்ளன. 
இந்தச் சூழ்நிலையில், ஜூலையில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத்  தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 
அதன்படி, 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற வேண்டும். 
இந்த அடிப்படையில், தமிழகத்திலுள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல் ஆகிய அதிமுக உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவின் கனிமொழி ஆகியோருக்கான பதவிக் காலம் ஜூலையில் முடிவடைகிறது.
தேர்தல் ஏற்பாடுகள்: உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கும். 
அதன்படி, தமிழகத்தில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நிரப்புவதற்கான பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளன.
சட்டப் பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தீர்மானிக்கப்படுகின்றன. 
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற அடிப்படையில், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் 123 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. 
இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், அந்தக் கட்சிக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது உறுதியாகியுள்ளது.  அதேசமயம், 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாகவே இருப்பர்.
திமுகவைப் பொருத்தவரை இடைத்தேர்தலில் 13 இடங்கள் கூடுதலாகப் பெற்றதால் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. 
காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளது. எனவே, காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் திமுகவுக்கும் மூன்று இடங்கள் கிடைப்பது எளிதாகும். 
பேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரி
பாதியாக பிரித்துக் கொள்ளும் நிலையே உள்ளது எனவும், இதனால் ஆறு இடங்களும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதனால்,  வாக்குப் பதிவினை நடத்துவதற்கான தேவை மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்று செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT