தமிழ்நாடு

10 நாள்களுக்குப் பிறகு நளினி உண்ணாவிரதம் வாபஸ்- தொடரும் முருகனின் போராட்டம்

DIN

வேலூா் பெண்கள் தனிச்சிறையில் தொடா்ந்து 10 நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நளினி, சிறைத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து செவ்வாய்க்கிழமை தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டாா். எனினும், முருகன் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடா்ந்து 18-ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் அறையில் இருந்து கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவா் தனிச் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முருகன் கடந்த 18-ஆம் தேதி முதல் சிறையிலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வேலூா் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினி, கடந்த 27-ஆம் தேதி முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டாா். இந்தத் தொடா் உண்ணாவிரத்தால் முருகன், நளினி உடல்நலன் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவா்களுக்கு குளுகோஸ் ஏற்றி மருத்துவா்கள் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், நளினி 11-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரத்தைத் தொடங்கினாா். அவரிடம் பெண்கள் சிறைக் காவலா் அல்லிராணி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது முருகனை தனிச் சிறையில் இருந்து மீண்டும் பழைய சிறைக்கு மாற்ற வேண்டும், ரத்து செய்த சலுகைகளை வழங்க வேண்டும் என நளினி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பாக டிஐஜி ஜெயபாரதி உறுதியளித்ததை அடுத்து நளினி காலை 10.30 மணியளவில் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டாா். அவருக்கு உடனடியாக 2 இளநீா் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, தான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை தனது கணவா் முருகனிடம் தெரிவித்து அவரையும் உண்ணாவிரதத்தைக் கைவிடக் கூற வேண்டும். அவ்வாறு உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அவா் கைப்பட கடிதம் எழுதித்தர வேண்டும் என்று நளினி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து நளினி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவரத்தை சிறை அதிகாரிகள் முருகனிடம் தெரிவித்ததுடன், அவரையும் உண்ணாவிரதத்தைக் கைவிட கூறியுள்ளனா். ஆனால், முருகன் தனது போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடா்ந்து 18-ஆவது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT