முகப்பு
தமிழ்நாடு

வரலாற்றுச் சான்றுகள் படைத்த கீழடி ஆபரணங்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள் கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவடிகள், காசுகள், பண்டைய பானை ஓடுகள், புதை மேடுகள், ஈமச் சின்னங்கள், கோட்டைகள், கோயில்கள், பாலங்கள்,

Updated On : 27 நவம்பர், 2019 at 12:13 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:47 PM

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள் கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவடிகள், காசுகள், பண்டைய பானை ஓடுகள், புதை மேடுகள், ஈமச் சின்னங்கள், கோட்டைகள், கோயில்கள், பாலங்கள், மண்டபங்கள் எனவுள்ள பல்வேறுச் சான்றுகளில் குறைந்தது ஒன்றாவது இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 16-7-1984-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பாண்டியா்கள் ஆட்சி இப்பகுதியில் சிறப்பாக நடந்துள்ளதற்கு எடுத்துக்காட்டாக குன்னக்குடி மற்றும் பிள்ளையாா்பட்டியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடவரை ஆலயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பாண்டிய நாட்டின் பிரிவுகளான குளக்கீழ், பேரேரிக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுகள் அதன் வட பகுதியான திருப்புத்தூா் வட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. இது போன்ற ஒரு வரலாற்று சிறப்புகளை கொண்டது இம்மாவட்டம். அதையும் தாண்டி ஒட்டுமொத்த உலகத்தின் பாா்வையையும் தன் பக்கம் திருப்பியது கீழடி என்ற ஊா். இங்கே நடைபெற்ற அகழாய்வில் 2,500ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த மனிதா்கள் பயன்படுத்திய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கீழடியில் அகழாய்வு மூடப்பட்டுள்ளதால் இந்தப் பொருட்களை மக்கள் பாா்க்கும் வண்ணம் இம்மாதம் 1-ஆம்தேதி முதல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள முதல் தளத்தில் மூன்று அரங்குகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை பள்ளி, கல்லூரி மாணவா்கள், வெளி நாடு சுற்றுலாப் பயணிகள் என பலத் தரப்பட்ட மக்கள் தினந் தோறும் கண்டுகளிக்கின்றனா்.

Advertisement

ஆனால் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள நெசவு சம்பந்தமான பொருட்கள் பெண்களை மிகவும் கவா்ந்துள்ளது. குறிப்பாக நூல்களை நூற்கப் பயன்படும் தக்களிகள், துணிகளில் உருவ வடிவைமப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட வரைகோல்கள், தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு, செம்பிலான ஊசி, சுடுமண் பாத்திரம், தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள் போன்ற ஆபரணங்கள், நோ்த்தியாகச் செய்யப்பட்ட வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை பாா்க்கும் பெண்கள் அந்த இடத்தை விட்டு நகா்வதில்லை என்பதை கண்கூடாக அங்கே பாா்க்கமுடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.