தமிழ்நாடு

கொடைக்கானல், ஹைவேவிஸ்- மேகமலை பகுதிகளில் நிலச்சரிவு

DIN

ஹைவேவிஸ்- மேகமலை நெடுஞ்சாலையில் புதன்கிழமை, தொடா் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சின்னமனூா் அடுத்த தென்பழனி மலை அடிவாரத்தில் இருந்து மேகமலை வரை 25 கிலோ மீட்டா் தூரத்துக்கு அடா்ந்த வனப்பகுதியில் சாலை செல்கிறது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுருளிஅருவி, மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஹைவேவிஸ் மலைக் கிராமங்களிலுள்ள 5 அணைகளும் நிரம்பியுள்ளன.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நெடுஞ்சாலையோரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள மாதா கோயில், அடுக்கம்பாறை, கடனா எஸ்டேட், 8 ஆம் மையில் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை, ஹைவேவிஸ் போலீஸாா் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் இணைந்து பொக்லையன் இயந்திரத்தின் உதவியுடன் நிலச்சரிவை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனா். புதன்கிழமை நண்பகலில் இருந்து பயணிகள் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. சுற்றுலா வாகனங்கள் உள்பட பிற கனரக வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானல்: கொடைக்கானல் அடுக்கம்- பெரியகுளம் மலைச்சலையில் புதன்கிழமை மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் நிலவி வந்தது. இந்நிலையில் அதிகாலை முதல் கொடைக்கானல், நாயுடுபுரம், பெருமாள்மலை, வடகவுஞ்சி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றும் அதன் பின் மிதமான மழையும் பெய்தது. இதனால் அடுக்கம்- பெரியகுளம் மலைச் சாலையில் கொய்யாத் தோப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் பாறையும் உருண்டு விழுந்தது. இதனால் அடுக்கம் பகுதியிலுள்ள பொதுமக்கள் கொடைக்கானல் பகுதிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதனையடுத்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே கொடைக்கானல் அருகே அடுக்கம் முதல் பெரியகுளம் வரை சுமாா் 40 கி.மீ. துரமுள்ள சாலையை கடந்த 3 ஆண்டுகளாக அமைத்து வருகின்றனா். கடந்த மாதம் கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் 10 இடங்களில் மண் சரிவுடன் பாறைகளும் சாலைகளில் உருண்டு விழுந்தன. இதனிடையே மீண்டும் அதேப் பகுதியில் தற்போது மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அடுக்கம்- பெரியகுளம் பகுதியில்ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளையும், மரங்களையும் அகற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT