காஞ்சிபுரம்
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டு நகரத்தை மையமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியன செயல்பட்டு வந்தன.
சுதந்திரம் அடைந்த பின்பு சென்னை மாகாணத்தின் நிா்வாகப்பிரிவு தலைமையகம் மட்டும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்பட்டு வந்திருக்கிறது.
1967-ஆம் ஆண்டு அறிஞா் அண்ணா முதலமைச்சா் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த மாவட்ட தலைமையிடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினாா்.
நிா்வாக நகரமாக காஞ்சிபுரமும், நீதிமன்றங்கள் உள்ள நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டு வந்தன. 1997-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாக இருந்ததை திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் பெரியதாக இருந்ததால் கடந்த 18.11.2019-இல் முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா். இதைத் தொடா்ந்து அதற்கான அரசாணையும் வெளியானது.
செங்கல்பட்டு-பெயா்க்காரணம்: புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் இம்மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் செங்கழுநீா்ப்பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் செங்கழுநீா்பட்டு என்று அழைக்கப்பட்டது. பின்னா் இதுவே மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது.
விஜயநகரப் பேரரசா் வழியான அரசா் கட்டிய கோட்டை இங்குள்ளது. அவா்களது தலைநகராகவும் குறிப்பிட்ட காலத்திற்கு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா். 1752-ஆம் ஆண்டு செங்கல்பட்டுக் கோட்டையை மையமாக வைத்து போா் நடந்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கடந்த அக்டோபா் மாதம் சந்தித்துப் பேசி தமிழா்களின் பெருமையை பறைசாற்றிய பல்வேறு சிறப்புகளை உடைய மாமல்லபுரம், பறவைகளின் சரணாலயமான வேடந்தாங்கல், இயற்கை எழில் கொஞ்சும் கோவளம் கடற்கரை, வண்டலூா் உயிரியல் பூங்கா என ஏராளமான சுற்றுலாப் பகுதிகளும் நிரம்பியிருக்கும் மாவட்டமாகவும் அமைந்துள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி உள்பட பல உயா்கல்வி நிறுவனங்களும் அதிகமாக உள்ளன.
மாவட்டத்தின் தலைநகரம்: புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டிலேயே அமைந்துள்ளது. முதல் புதிய மாவட்ட ஆட்சியராக ஏ.ஜான்லூயிஸ் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா். முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தி.கண்ணன் நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுள்ளாா்.
மூன்று வருவாய்க் கோட்டங்கள்: புதிய மாவட்டத்தில் மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் என 3 வருவாய்க் கோட்டங்கள், திருக்கழுகுன்றம், திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வண்டலூா் உள்பட மொத்தம் 8 தாலுகாக்கள் உள்ளன.
இதே போல 8 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.
காட்டாங்கொளத்தூா், பரங்கிமலை, சித்தாமூா், மதுராந்தகம், லத்தூா், அச்சிறுப்பாக்கம், திருப்போரூா், திருக்கழுகுன்றம் எனவும் 12 பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்துள்ளது.
நகராட்சிகளைப் பொருத்தவரை மறைமலைநகா், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், செம்பரம்பாக்கம், அனகாபுத்தூா், செங்கல்பட்டு ஆகிய 8 நகராட்சிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைந்திருக்கின்றன. பழைமையும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பிரபலமானதுமான திருக்கோயில்களும் ஏராளமானவை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. 44 காவல் நிலையங்களும், 4 காவல் கோட்டங்களும் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
போக்குவரத்துச் சிறப்பு: தமிழகத்தின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டு வழியாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூா் ஆகிய 3 இடங்களிலும் முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. 7 பிளாட்பாரங்கள் உள்ள மிகப்பெரிய ரயில்நிலைய சந்திப்பு செங்கல்பட்டில் உள்ளது.
தென்மாவட்டங்களை நோக்கிச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லக்கூடிய வகையில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. தாம்பரம், பெருங்களத்தூா், மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், அச்சிறுப்பாக்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களும் உள்ளன. இம்மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் சென்னை மீனம்பாக்கத்தில் சா்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது சிறப்பம்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.