தமிழ்நாடு

மத்திய அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாய்கிறது

DIN

மத்திய அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாய்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை பங்கேற்ற ஜி.ராமகிருஷ்ணன், விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாக, மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அறிமுகத்தால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவுவதாக, நீதிஆயோக் ஆலோசகர் கவலை தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகியுள்ளது. எனினும், பெரிய நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடியை வரிச் சலுகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
 ஜிஎஸ்டியால்தான் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் பாதித்துள்ளதாக அரசே தெரிவித்துள்ளது. எனினும், ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் வரி குறைப்பை கோரவில்லை.
 மத்திய அரசு திட்டங்களை விமர்சித்தால் தேசத் துரோக வழக்கு பாய்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை திணிக்கின்றனர். பாஜகவுடன்அதிமுக கூட்டணியில் உள்ளதால், மாநில அரசு எதையும் எதிர்த்து கேட்பதில்லை. இதனால், தமிழக மக்களின் உரிமைகள் பாதிக்கின்றன. புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளிகளை மூடி வருகின்றனர்.
 இத்தகைய அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 16-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
 தேர்தல் நிதியாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ரூ.10 கோடி வழங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஜி. ராமகிருஷ்ணன் பதிலளித்துக் கூறியதாவது: தேர்தல் செலவுக்கு திமுக நிதி கொடுத்தது உண்மைதான். அதற்கான செலவினங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். அது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடும். கூட்டணி கட்சி நிதி வழங்கியதை தவறாகப் பார்க்க முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ரூ.27 ஆயிரம் கோடி வரை செலவிட்டிருக்கிறது.
 இதனால்தான், தேர்தல் முறையை மறுசீரமைக்க வேண்டுமென கோரி வருகிறோம். தேர்தலின்போது கட்சிகளிடம் நிதி பெற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையமே செலவு செய்யும் ஜெர்மன் நாட்டு முறையை இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
 முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ரவீந்திரன், கீதா உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT