தமிழ்நாடு

கீழடியில் 6-ஆம் கட்டப் பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வந்த 5- ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. 6- ஆம் கட்ட அகழாய்வுப் பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.

 கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வு மேற்கொண்டன. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு, மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உள்பட 900-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.

 இந்த அகழாய்வில் அதிகளவில் பலவகை சுவர்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வுப் பணிகள் கடந்த செப். 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் தொன்மையானது என்பது தெரியவந்தது. இதனால் தமிழர்கள் மத்தியில் கீழடி மீதான ஆர்வம் அதிகரித்து, அரசியல் தலைவர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் தினமும் கீழடியில் குவிந்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 இந்நிலையில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதியை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கீழடியில் குவிந்தனர். 6-ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT