தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலை: ரூ.40 கோடி ஒதுக்கீடு

DIN


வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும், உடனடித் தேவைகளுக்காகவும் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

 தமிழகத்தில் நான்கு நாள்கள் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, பருவமழை காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

மழைக் காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்றத் தேவையான ஆள்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஏதுவாக தேவையான கருவிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மருந்துகள் இருப்பு அவசியம்: வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, வயிற்றுப் போக்கு, தொற்று நோய் போன்றவை ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் கிருமிநாசினி பவுடர், மருந்துகள் உள்ளிட்டவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைத்திருப்பதும் அவசியமாகும். 

பேரிடர் காலங்களில் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் இரண்டு மாத காலத்துக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிக்க வேண்டும்: அனைத்து மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்.  நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  கண்காணிப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

நிதி ஒதுக்கீடு: பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், உடனடித் தேவைகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரிக்கு 50 வீரர்கள் தயார்
பருவமழையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவுறுத்தல்களை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் வெளியிட்டார். அதன் விவரம்:-

நீலகிரி மாவட்டத்தில் இப்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையினரால் 50 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் கூடுதலாக தீயணைப்பு வீரர்களை நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பவும், மாநிலத்தில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT