தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மூடல்

DIN


கன்னியாகுமரி  மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பேச்சிப்பாறை அணை திங்கள்கிழமை மூடப்பட்டது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விடிய, விடிய மழை நீடித்ததால் நாகர்கோவில் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, கருங்கல், தக்கலை, இரணியல், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் குழித்துறை ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. திற்பரப்பு அருவியில் அதிகளவில் தண்ணீர் விழுகிறது. தொடர்  மழையால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தே காணப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர். திங்கள்கிழமையும் மழை நீடித்ததால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. 
அதிகபட்சமாக மயிலாடி-80.2, நாகர்கோவில்-63.7, கொட்டாரம் -72 மிமீ மழை பதிவாகியுள்ளது. 
மாவட்டத்திலுள்ள குளங்கள், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்து, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
அணைகள் மூடல்: பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 387 கனஅடி நீர்வரத்து இருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 14.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 851 கனஅடி நீர்வரத்து இருந்தது. சிற்றாறு-1 அணை 11.64 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 89 கனஅடி நீர் வரத்து இருந்தது. சிற்றாறு-2 அணை 11.74 அடியாக உள்ளது. அணைக்கு 134 கனஅடி நீர்வரத்து இருந்தது. பொய்கை அணை 6.90 அடி, மாம்பழத்துறையாறு அணை 35.60 அடியாகவும் உள்ளது.
பரவலாக மழை பெய்து வருவதால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகள் மூடப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT