தமிழ்நாடு

அம்பேத்கரை இழிவுபடுத்தும் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகம்: காங்கிரஸ் கடும் கண்டனம் 

DIN

சென்னை: அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெள்ளியன்று  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்ந்து இடம் பெறுவதும் அதை எதிர்த்து அரசியல், சமுதாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த காலங்களில் உழைப்பால் உயர்ந்த நாடார் சமுதாயத்தினரை இழிவு படுத்தும் வகையில் சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பாடப்புத்தங்களில் இடம் பெற்றிருந்த ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்கியது.

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்துகிற வகையில், 6 வது வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் எந்த சாதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரை 'தலித்' என்று அடையாளப் படுத்துகிற வகையில் கருத்து இடம் பெற்று இருக்கிறது. அதேபோல், தலித் என்றால் யார் என்;ற கேள்விக்கு 'தீண்டத்தகாதவர்'; என்று பதில் கூறுகிற வகையில் மற்றொரு கருத்தும் அதில் இருக்கிறது. மேலும் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் பாடப்புத்தகங்களில் கருத்துக்கள் அமைந்துள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது மத்திய பா.ஜ.க. அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை புகுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே இதை கருதவேண்டி இருக்கிறது. இத்தகைய கடுமையான ஆட்சேபகரமான கருத்துக்கள் பாடப்புத்தகங்களில் எப்படி இடம் பெற்றன என்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் உரிய விளக்கத்தைத் தரவேண்டும்

இந்திய மக்களால் மிகவும் போற்றப்பட்ட அரசமைப்பு சட்டத்தின் தந்தையாக கருதி மதிக்கப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகத்தின் மூலமாக இழிவுபடுத்தப் பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வன்மையான கண்டனத்துக்குரிய பகுதிகளை உடனடியாக நீக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பா.ஜ.க. அரசை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT