தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழமையான நடராஜர் சிலை சென்னை வந்தது

DIN

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை ரயிலில் இன்று சென்னை வந்தது.

கல்லிடைக்குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருடு போயின.இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கடந்த 1984-ஆம் ஆண்டு  வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும்  உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். அதில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ  அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோரின் உதவியுடன் இந்தச் சிலை கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுடையது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது. 

இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து,  ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிலை தில்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து  ரயில் மூலம் சென்னைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி அனைத்து தரப்பினருக்கும் நன்றி. நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT