தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் செலவு ரூ.450 கோடியைத் தாண்டியது: ரூ.37.49 கோடி கூடுதல் நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான செலவு ரூ.450 கோடியைத் தாண்டியது. ஏற்கெனவே, ரூ.413 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ரூ.37.49 கோடி நிதியை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவு அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக ரூ.413 கோடியே 86 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை தேர்தல் பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் நிலுவையில் உள்ள செலவினக் கணக்குகளை தீர்ப்பதற்கான பட்டியலை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, படிகள், பயணச் செலவு, தொலைபேசி கட்டணம், விளம்பரச் செலவுகள், வாகனங்களை வாடகைக்கு எடுத்தது, எரிபொருள் செலவு என பாக்கியாக உள்ள செலவுகளை பைசல் செய்வதற்கு ரூ.64 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 960 என்ற அளவில் தொகையை ஒதுக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர்.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையானது தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த அரசு ரூ.37 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரத்து 771-க்கு நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சம்பளங்கள் மற்றும் இதர படிகளுக்காக ரூ.1.5 லட்சமும், பயணப் படிகளாக ரூ.56.49 லட்சமும், அலுவலகச் செலவுகள் என்ற வகையில் ரூ.51.06 லட்சமும், இதரச் செலவுகளுக்காக ரூ.18.32 கோடியும், மோட்டார் வாகனங்களுக்காக ரூ.16.91 லட்சமும், வாகனங்களை வாடகைக்கு எடுத்த வகையில் ரூ.8.10 கோடியும், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்த வகையில் ரூ.81.84 லட்சமும், எரிபொருள் செலவுக்காக ரூ.8.98 கோடி உள்பட செலவினத் தொகை ரூ.37.49 கோடி நிதி விடுவிக்கப்படுவதாக தனது உத்தரவில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவு ரூ.450 கோடி: மக்களவைத் தேர்தலுக்காக ஏற்கெனவே ரூ.413.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக ரூ.37.49 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மக்களவைத் தேர்தலுக்கான 
செலவானது ரூ.450 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த காலங்களில் தேர்தலுக்கான செலவுகள் என்பது ரூ.400 கோடிக்கு உட்பட்டே இருந்தன. ஆனால், இப்போது முதல் முறையாக தேர்தலுக்கான செலவுகள் ரூ.450 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT