தமிழ்நாடு

விழாக் காலத்தை இழந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்

DIN

நாடு முழுவதும் நிலவும் தடையுத்தரவால் விழாக் காலத்தை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வருவாயின்றி தவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உழைக்கும் வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினாலும், வாழ்வாதாரத்தை ஈடுகட்டும் விதமாக இல்லை. இதனிடையே, நிவாரணம் கிடைக்காமல் எண்ணற்றோர் தவிக்கின்றனர். இதேபோல, நாட்டுப்புறக் கலைஞர்களும் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆண்டுதோறும் தை மாதத்தில் தொடங்கி வைகாசி வரையிலான 5 மாதங்கள்தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய காலம். இந்த மாதங்களில்தான் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும். 

குறிப்பாக, பறை, கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், கும்மி கோலாட்டம், குறும்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு அதிக வாய்ப்புக் கிடைக்கும். இந்த 5 மாதங்களில் கிடைக்கும் வருவாய்தான் ஆண்டு முழுவதற்குமான வாழ்வாதாரமாக இருக்கிறது என்கின்றனர் நாட்டுப்புறக் கலைஞர்கள். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் கஜா புயல், 2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலால் தை முதல் வைகாசி வரையிலான காலகட்டத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு தடையுத்தரவால், கோயில்கள் மூடப்பட்டு, விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டுப்புறக் கலைஞர்கள் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக முழுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இப்போது, அரசு நிவாரணம் அறிவித்திருந்தாலும், பாதி பேருக்குக் கூட கிடைக்காது என்கின்றனர் நாட்டுப்புறக் கலைஞர்கள். கலை, பண்பாட்டுத் துறையில் பெரும்பாலான கலைஞர்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால், நிவாரணத் தொகையும் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் நடன, நையாண்டி மேள சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்தது: தமிழ்நாட்டில் 3 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். ஆனால், ஒரு லட்சம் பேர்தான் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அரசு அறிவித்துள்ள ரூ. 1,000 நிவாரணத் தொகை எங்களது வாழ்வாதாரத்தை ஈடு செய்யாது. 

இந்த நான்கைந்து மாதங்களில் கிடைக்கக்கூடிய வருவாயைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குடும்பச் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு ரூ. 15,000 நிவாரணம் வழங்க வேண்டும். பெரும்பாலான கலைஞர்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், வருவாய்த் துறை அலுவலர்களிடம் சான்று பெறுவது கடினம். கலைமாமணி விருது உள்ளிட்ட அரசின் உயரிய விருது பெற்ற கலைஞர்களிடமிருந்தோ, அரசு அங்கீகாரம் பெற்ற சங்கத்திலிருந்தோ கடிதம் பெற்று வரும் கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றார் ராஜேந்திரன்.

ஏற்கெனவே, பெரும்பாலான நாட்டுப்புறக் கலைஞர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, தடையுத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், தன்னார்வலர்கள் சிலர் நிவாரண உதவி செய்து வருகின்றனர். இந்த உதவியும் சிலருக்குத்தான் கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான கலைஞர்கள் வாழ்வாதாரத்தை நினைத்து வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே, வாழ்வாதாரத்தை ஈடு செய்யக்கூடிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற எதிர்ப்பாப்பில் உள்ளனர் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT