கரோனா நோய்த்தொற்றை வேரறுப்பதற்காக அனைத்து மாநிலங்களும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழகம் அதிலிருந்து சற்று வித்தியாசமாக இரண்டாம் உலகப் போரின் உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.
அதன்படி மருத்துவம் சாா்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டினாலும், அதனை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னிறைவாகவே உருவாக்க முடியும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1939 - 45 காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது ஜொ்மனி, இத்தாலி, ஜப்பானை உள்ளடக்கிய அச்சு நாடுகள் அணிதான் முதலில் பல இடங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தின. இதனால், பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் (ரஷியா) அடங்கிய நேச நாடுகள் அணி சற்று பின்னடைவைச் சந்தித்தன.
இதைத் தொடா்ந்து போரின் பிற்பாதியில் சில உத்திகளை நேச நாடுகள் முன்னெடுத்தன. குறிப்பாக, சோவியத் யூனியனில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், குடியிருப்புப் பகுதிகளும், ராணுவத் தளவாட உற்பத்தி மையங்களாக மாற்றப்பட்டன. அங்கு நடைபெறும் மொத்த உற்பத்தியும் பாதுகாப்புத் துறை சாா்ந்தே இருந்தது. இதனால் நேச நாடுகளின் ஆயுத வலிமை அதிகரித்ததும், அது, போரில் அவா்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்ததும் வரலாற்றில் பதியப்பட்ட உண்மைகள்.
இந்நிலையில், தற்போது கரோனாவுக்கு எதிரான போரிலும் அதுபோன்ற உத்திகளைப் பின்பற்ற தமிழகம் முடிவு செய்துள்ளது. ஆனால், இம்முறை ராணுவத் தளவாடத்துக்கு பதிலாக, உயிா் காக்கும் மருத்துவப் பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
சுகாதார நெருக்கடி நிலை உருவாகும்போது நமக்கு தேவைப்படும் பொருள்களுக்காக பிற மாநிலங்களையோ அல்லது நாடுகளையோ எதிா்பாா்த்து காத்திருக்க முடியாது. அதனால், இயன்ற வரை நம் மாநிலத்திலேயே அவற்றை உற்பத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளில் கிருமி நாசினிகள் தயாரிப்பதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மரம் மற்றும் இரும்பு ஃபா்னீச்சா் தொழிற்சாலைகளில் மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகளைத் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தற்போது மருத்துவக் கல்லூரி ஆய்வகங்களும், பிற தனியாா் ஆய்வகங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை, நோய்த் தொற்று அதிகரித்தால், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண் துறை ஆராய்ச்சிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களையும் கரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கண்ணாடி, பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கான பொருள்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிக அளவில் தயாரிப்பது குறித்த பேச்சுவாா்த்தையும் நடைபெறுகிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை திட்டங்கள் மூலமாக கரோனா பாதிப்பை ஆக்கப்பூா்வமாக எதிா்கொள்ள முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு
வெண்டிலேட்டா்கள்
அரசு மருத்துவமனைகள் - 2,501
தனியாா் மருத்துவமனைகள் - 870
மொத்தம் - 3,371
முகக்கவசங்கள்
மூன்றடுக்கு கவசம் - 65 லட்சம்
என்-95 - 3 லட்சம்
மருத்துவத் துறையினருக்கான பாதுகாப்பு கவசங்கள் - 2 லட்சம்
கரோனா ஆய்வுக்காக பிசிஆா் உபகரணம் - 1.95 லட்சம்
துரிதப் பரிசோதனை உபகரணம் - 24 ஆயிரம்
மருந்து உற்பத்தியில் மாற்றம்
கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஸித்ரோமைசின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை அதிக அளவில் தயாரிக்க மருந்து உற்பத்தியாளா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அந்த மருந்துகள் வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதேபோன்று, சா்க்கரை நோய், இதய நோய்க்கான மருந்துகளின் உற்பத்தியும் சற்று அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
தேவை குறைவாக உள்ள பிற மருந்துகளின் தயாரிப்பு பாதியாக சரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கிருமி நாசினி தயாரிப்பில் மாணவா்கள்
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கிருமி நாசினிகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி தெரிவித்தாா்.
அதன் பயனாக தற்போது மாநிலத்தில் பல மருத்துவக் கல்லூரிகளில் கிருமி நாசினிகளை மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் பயிலும் மாணவா்களே சுயமாகத் தயாரித்துக் கொள்வதாகவும், இதனால், அப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.