முகப்பு
தமிழ்நாடு

காந்தி மார்க்கெட் அரசியலால் கரோனா அபாயம்!

திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் புகுந்துள்ள பல்வேறு புரியாத அரசியலால் கரோனா தொற்றுக்கு மக்கள் ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் புகுந்துள்ள பல்வேறு புரியாத அரசியலால் கரோனா தொற்றுக்கு மக்கள் ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால், திருச்சி காந்தி மார்க்கெட்டிற்குப் பதில் பழைய பால் பண்ணை சாலையில் மொத்த காய்கனி விற்பனை சந்தை இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. ஆனால், இங்கு  நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், கரோனோ விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. 

மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மக்கள் தொடர்ந்து கூட்டமாக வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சந்தையை பால்பண்னை பகுதியிலிருந்து அதிக இட வசதி கொண்ட சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு ஏப்.27ஆம் தேதி முதல் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடனே திருச்சியில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களில் மொத்தம் 24 சங்கங்கள் இணைத்து மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஏற்க முடியாது என எதிர்ப்பு. காந்தி மார்கெட்டில் மீண்டும் வியாபாரம் செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.  

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இடநெருக்கடி மற்றும் சமூக விலகல் இல்லாமல் இருப்பதால் ஏற்பட போகும் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால், இதை எதையுமே வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் வெல்மண்டி நடராஜன் கலந்து கொண்டு வியாபாரிகளுடன் பேசினார். வியாபாரிகளின் பிடிவாதத்தால், மே 3- ஆம் தேதி வரை பால்பண்ணையில் தொடர்ந்து மொத்த காய்கனி சந்தையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிவித்தார். 

இதற்கு, சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சியை பாதுகாப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கி வைரலாக பரவச் செய்துள்ளனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மீண்டும் செயல்பட தொடங்கவுள்ள இந்த சந்தையால் கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கருதி, காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய தன்னாரவலர்கள் குழு விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தலையீடு காரணமாக மார்க்கெட் பிரச்னை இப்படிச் சிக்கிச் சீரழிவது திருச்சி மக்களைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதே தன்னார்வலர்களின் கருத்தாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →