மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த 6 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80 பேர் வரையில் இதில் சிக்கினர். இதுவரை 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை நான் 7.8.2020 அன்று தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பூர்வீகமாக கொண்டு பல ஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக தலைமைச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவல் பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நான் உத்தரவிட்டேன்.
அதன் பேரில், தேனி மாவட்டத்தில் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு 7.8.2020 அன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து தேசிய மீட்புப் பணி குழுவினருடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டில் உள்ள உயிரிழந்தவர் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர் ஒருவருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.