முகப்பு
தமிழ்நாடு

வேலூர் உள்பட 3 மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
வேலூர் உள்பட 3 மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி
பகிர்:

இன்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், 

கரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி, இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியுள்ள ஒரு கொடிய நோய் தொற்றாகும். தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தப் புதிய நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி, உலகப் பொருளாதாரம் மட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரமும், தமிழகப் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், நோய் தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கரோனா நோய் தொற்று உயிர் பிரச்சனையாக இருக்கின்ற காரணத்தினாலும், மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும், இதனை அரசு எச்சரிக்கையாகக் கையாளுகிறது. கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழ்நாடு அரசும் தொடர்ந்து கடைபிடித்து, இயல்புநிலை பாதிக்காவண்ணம் பல்வேறு தளர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும்போது, நோய் பரவலைத் தடுப்பதற்கு, இ-பாஸ் முறையை கடைபிடித்தோம். இ-பாஸ் பெறுவதில் ஏற்படும் பல்வேறு சிரமங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்தவுடன், பொதுமக்கள் நலன் கருதி, அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு இ-பாஸ் முறையை எளிமையாக்கி உள்ளது.

எனவே, பொதுமக்கள் வீணாக வெளியில் செல்வதைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்வதற்கு இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும். ஏனென்றால், இந்த வைரஸ் நோய் எளிதாகப் பரவக்கூடியது. மேலும், இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்து வருகிறார்கள். ஏற்கனவே பிற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு இந்தத் நோய் எளிதாகப் பரவுவதால், பொதுமக்கள், குறிப்பாக முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம். இதனை பொதுமக்கள் முதலில் உணர வேண்டும். ஆகவே, அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய நிலையில், அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்கிற மாநிலம் தமிழ்நாடுதான். இதற்காக, அரசு, பலமுறை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும்பொழுது, அரசு அதற்கு தக்கவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், மருத்துவ வல்லுநர்களுடன் ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் அரசால் நடத்தப்பட்டு, அவர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி, இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றால் பலர் இறந்திருக்கிறார்கள். இந்த நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தொற்று அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் இந்நோய் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல், நோய் தொற்று உள்ள இடங்களுக்கு நடமாடும் மருத்துவமனை மூலமாக நோய் தொற்று அறிகுறி தென்பட்டவர்களைக் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் போன்றவை கையிருப்பில் முழுமையாக உள்ளன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இந்தியாவில், கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கக்கூடிய மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. அதேபோல், அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதில் முதலிடம் வகிப்பதும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதும், இறப்பு சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளதும் தமிழ்நாட்டில்தான். 

வளர்ச்சிப் பணிகளை பொறுத்தவரை, குடிமராமத்துத் திட்டம் என்ற அற்புதமான திட்டத்தின் மூலமாக ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது என்றும், தென்மேற்குப் பருவமழை ஓரளவு பொழிந்துள்ளதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர்ப் பிரச்னை இல்லை என்ற செய்தியையும், பருவமழை முழுமையாகப் பொழியும்பொழுது நீர்நிலைகள் அனைத்திலும் நீர் நிரம்பி விடுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பொழிந்துள்ளதால் விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நிலத்தடி நீரும், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரும் கிடைக்கின்றது.

அதேபோல், தடுப்பணை கட்டுகின்ற பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. பல்வேறு தரப்பு மக்கள் அளிக்கின்ற கோரிக்கைகளின் அடிப்படையில், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் எங்கெங்கு கட்ட வேண்டுமென்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அளிக்கும் அறிக்கையினை அரசு பரிசீலித்து, பாலாறு போன்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக, மூன்றாண்டு காலத் திட்டமாக ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டு, தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு வேளாண் பணிகளுக்கு முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியிருக்கிறோம். சொட்டுநீர் பாசனத் திட்டத்தை ஊக்குவிக்கின்ற விதத்தில் மானியத்துடன் விவசாயப் பெருமக்கள் சொட்டு நீர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்தில் சுமார் 349 காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளும், 365 தோல் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு தொழில்களுக்கும் தேவையான உதவிகளை அரசு அளித்துக் கொண்டிருக்கிறது. வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளதால், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகவும், பொருளாதார மேம்பாடு அடையவும் வாய்ப்பாக இருக்கின்றன.

2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு மூலம், இந்தப் பகுதிகளில் பல்வேறு புதிய தொழில்கள் வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. எனவே, வேளாண், கல்வி, தொழில் என பல்வேறு துறைகளுக்கும் அரசு முன்னுரிமை வழங்கி, இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →