முகப்பு
தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 28% அதிகம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 28% மழை தமிழகத்தில் அதிகம் பெய்துள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பகிர்:

தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 28% மழை தமிழகத்தில் அதிகம் பெய்துள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க மண்டலம் பட்டாளம், பாரன்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள கொவைட் - 19 பரிசோதனை மையத்திற்கு சென்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு சிறப்பு காய்ச்சல் முகாமிற்கு சென்று பொதுமக்களுக்கு மாத்திரைகள், முக கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கினார்கள்.
பின்பு செய்தியாளர்களிடம் மாண்புமிகு அமைச்சர் பேசியதாவது:-
“திரு.வி.க. மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 9761 பேர் இதில் 8313 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். 1133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் எடுத்த தீவிர கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா சென்னையில் கட்டுக்குள் வந்துள்ளது. திரு.வி.க. மண்டலத்திலும் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழை 28% அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று 23.08.2020 சராசரியாக 52.93 மி.மீ. மழை பெய்துள்ளது.
பவானிசாகர், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சானி, பெரியாறு, வைகை, சாத்தனூர் பரம்பிக்குளம், அமராவதி, ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக உள்ளது.
மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி சோலையாறு போன்ற அணைகளில் விட நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக
உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்தேக்கங்களான பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் வீராணம் நீர் தேக்கங்களின் கொள்ளளவு கடந்த ஆண்டு இன்றைய தேதியில் உள்ள கொள்ளளவை விட அதிகமாக உள்ளது. வளிமண்டல சூழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தமட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் இந்த ஆண்டு குறைவாக இருக்கும்.
கரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீதி வீதியாக காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தி அறிகுறிகள் கண்டறிந்து பரிசோதனைகள் முகாம்கள் மூலம் தொற்றுகள் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்கை அளிக்கப்படுவதால் குணமடைந்து வருகின்றனர். மேலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இ-பாஸ் பொறுத்தமட்டில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தக்க முடிவு எடுப்பார்கள்.
இரண்டாம் தலைநகரம் தொடர்பாக பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தென் மாநில மக்கள் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஆய்வு செய்து தக்க முடிவு எடுப்பார்கள் என்றார்”. உடன் கண்காணிப்பு அலுவலர் அரவிந்தன், இ.ஆ.ப., முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.