தமிழ்நாடு

முதியவர்களின் குறைகளைத் தீர்க்க வலுவான முறை அவசியம்: எம்.வெங்கய்ய நாயுடு

DIN


புதுதில்லி: முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு வலுவான குறைதீர்க்கும் முறை அவசியம் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பது: முதியவர்கள் அறிவு மற்றும் ஞானத்தின் களஞ்சியமாக உள்ளனர். தங்களது இறுதிக் காலத்தில் மரியாதை, அன்பு, கவனம் மற்றும் கண்ணியத்துடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும். பெரியவர்களைக் கவனித்துக் கொள்வது இளைஞர்கள் உள்பட அனைவரின் புனிதமான கடமையாகும். பெரியவர்கள் வசதியான, மகிழ்ச்சியான, திருப்தியான வாழ்க்கை வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
முதியோர் இல்லங்கள் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக்காட்டுவது மட்டுமன்றி, குடும்ப விழுமியங்களின் வீழ்ச்சியையையும் சோகத்துடன் பிரதிபலிக்கின்றன. கூட்டுக் குடும்ப முறையில் கலாசார மதிப்புகள், பாரம்பரியம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை தலைமுறை தலைமுறையாக நாம் விட்டுச் செல்கிறோம். ஆனால், அதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் இன்றைய வாழ்க்கைமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

கூட்டுக் குடும்ப முறையில் உள்ள நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் ஓர் உள்ளார்ந்த சமூகப் பாதுகாப்பு உள்ளது. இதன்மூலம் குழந்தைகள் தங்களது தாத்தா, பாட்டியுடன் ஒரு வலுவான உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பிரச்னையான நேரங்களில் அவர்களது வழிகாட்டுதலை, ஆறுதலை நாடுகிறார்கள். முதியவர்களும் குடும்பத்தின் இளைய உறுப்பினர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையில் முதியவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. 2050}ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் முதியவர்களாக இருப்பார்கள். இந்தியாவில் முதியவர்களில் பெரும்பாலானோர் தனியாக வாழ்கிறார்கள் அல்லது தங்களது நிதி மற்றும் உணர்வுபூர்வமான தேவைகளுக்காக தங்கள் பிள்ளைகளைச் சார்ந்து உள்ளனர். நகர்ப் பகுதிகளில் நெருக்கடி, சிறிய வீடுகள் ஆகியவை பிள்ளைகள் தங்கள் பெற்றோரை சொந்த ஊரில் விடுவதற்கான காரணங்களாக உள்ளன.

முதியவர்களின் நலனுக்காக அரசின் கொள்கைகள், திட்டங்கள் இருந்தாலும், பல்வேறு சேவைகளைப் பெறுவதில் மூத்த குடிமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை நாம் இன்றும் பார்க்கிறோம். வங்கிகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், ரயில்களில் பலமுறை முதியவர்கள் நீண்ட நேரம் நிற்கிறார்கள். 

நாடாளுமன்றத்தில்கூட முதியவர்களுக்கான பிரச்னைகள் குறித்து ஒருசில கேள்விகளே எழுப்பப்பட்டுள்ளன. இச்சூழலில் முதியவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண ஒரு வலுவான முறை அவசியமாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT