நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம்: நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம் எருமாபாளையம் அருகே உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் போராட்டத்தை முடக்கும் முயற்சிகள் பலிக்காது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது. இது திமுகவிற்கான போராட்டம் அல்ல; விவசாயிகளுக்கான போராட்டம் என்பதை ஆளுங்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.
விவாசயிகளை மதிக்காமல், ஜனநாயகத்தை மதிக்காமல், அதிகார பலம் இருப்பதால் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அமைச்சர் ஒருவர் ராஜிநாமா செய்த போதே மத்திய அரசு திருந்தி இருக்க வேண்டும். ஆனால், கரோனா காலத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளார்கள். மத்திய அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்த விவசாயிகள், தற்போது படையெடுத்துள்ளார்கள்.
விவசாயிகள் வீதியில் போராடும் நாளில் பிரதமர் மோடி பேசும்போது விவசாயிகளுக்கு நன்மை செய்துள்ளதாக கூறுகிறார். விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற உத்தரவாதத்தை ஏன் சட்டமாக கொண்டு வரவில்லை. ஆட்சிக்கு வரும் முன் விவாசயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவேன் என்றார்.
சேலம் எருமாபாளையம் அருகே உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் திமுகவினர்.
மோடியின் வாக்குறுதியை நம்பி விவசாயிகள் வாக்களித்தார்கள். அதற்கு அவர் கொடுக்கும் பரிசுதான் விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள். வறுமை பற்றி தெரியாத பிரதமர் சட்டம் இயற்றினார்; விவசாயம் பற்றி தெரியாத முதல்வர் அதை ஆதரிக்கிறார்.
பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு பச்சை துரோகம் செய்கிறார். வேளாண் சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு என்று முதல்வர் கேட்கிறார். சிறு குறு நடுத்தர விவசாயிகள்தான் இந்தியாவில் 95 சதவீதம் உள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. வேளாண் சட்டம் குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற சட்டம் உள்ளது; அப்படியிருத்தும் மாநில அரசு ஆதரிப்பது ஏன்?, வேளாண் சட்டம் குறித்து முதல்வர் விவாதிக்க தயாரா?
விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப்பேரவையைக் கூட்டி வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றினால் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.
மூன்று வேளாண் சட்டம் திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடர வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போர் புரிந்து வருகின்றனர். எனவே நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.