முகப்பு
தமிழ்நாடு

திருச்சுழி அருகே நள்ளிரவில் 108 அவசர மீட்பு வாகனத்தில் குழந்தை பெற்ற பெண்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் 108 அவசர மீட்பு வாகனத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
அவசர மீட்பு வாகனத்திலேயே குழந்தை பெற்ற முத்துலட்சுமியுடன் மருத்துவ உதவியாளர் அன்புராஜ்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் 108 அவசர மீட்பு வாகனத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார். அவசர காலத்தில் அப்பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் செய்த மருத்துவ உதவியாளருக்கும், வாகன ஓட்டுநருக்கும் கிராமத்தினர் நன்றிகள் தெரிவித்தனர்.

திருச்சுழி அருகே உடையசேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(27). இவரது மனைவி முத்துலட்சுமி(22). கர்ப்பிணியான முத்துலட்சுமிக்கு சனிக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் திருச்சுழி 108 அவசர மீட்பு வாகனத்திற்கு குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர். அப்போது அக்கிராமத்திற்குச் செல்லும் வழியில் மழையால் சேறும் சகதியுமாக இருந்தும் அவ்வாகன ஓட்டுநர் நாராயணசாமி உரிய காலத்திற்குள் துரிதமாக வாகனத்தைச் செலுத்தினார்.

பின்னர் கர்ப்பிணியை வாகனத்தில் ஏற்றிச்செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானதால் வழியிலேயே நிறுத்தி அக்கர்ப்பிணியின் உறவுக்காரப் பெண்ணின் உதவியுடனும் அந்த வாகனத்தில் வந்த மருத்துவ உதவியாளர் அன்புராஜின் மருத்துவ உதவியுடனும், முத்துலட்சுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.

பின்னர் திருச்சுழி அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்றனர். இதனிடையே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உரிய உயிர்காப்பு மருத்துவ உதவிகள் செய்த மருத்துவ உதவியாளர் அன்புராஜிற்கும், அதேபோல மழைச்சூழலிலும் சேறும் சகதியுமான கிராமச் சாலையில் துரிதமாகவும், உரிய காலத்திலும் வாகனத்தைச் செலுத்தி உதவிய ஓட்டுநர் நாராயணசாமிக்கும், முத்துலட்சுமியின் கணவரும், உறவினர்களும், கிராமத்தினரும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.