உயிருக்குப் போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.
காலை 9:30 மணி அளவில் விழுப்புரம் புறவழிச் சாலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு காரிலும், அவருடைய பாதுகாப்பு போலீஸார் மற்றொரு காரிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் பாதை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் அருகே ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த பாவாடை மகன் வெங்கடேசன்(27) என்ற இளைஞர் ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கிடந்துள்ளார். அந்த இளைஞரை மீட்க அவசர ஊர்தி வருவதற்காக அங்கிருந்த பொதுமக்கள் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த அமைச்சர் அங்கு கூட்டமாக இருப்பதைக் கண்டதும் தனது காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி பார்த்துள்ளார்.
அப்போது அங்கு விபத்தில் சிக்கி ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்ட அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அமைச்சர், அவசர ஊர்திக்காக காத்திருக்காமல் உடனடியாக தனது பாதுகாப்பு வானத்தில் மீட்டு அருகில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
உடனே அமைச்சருடன் இருந்த போலீஸார் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துன் போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவாக சென்றனர்.
இதுகுறித்து அறிந்து அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் அந்த இளைஞருக்கு தேவையான சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சரின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
இதன்பிறகு சுமார் அரை மணி நேரம் தாமதமாக அமைச்சர் சி.வி.சண்முகம் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.