வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு-நீக்கல்: இதுவரை 45 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 45 சதவீத மனுக்கள்
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 45 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தோ்தல் துறை வெளியிட்டது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் ஒரு அங்கமாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
மேலும், தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்து 324 வாக்குச் சாவடி அமைவிடங்களில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களின் போது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
மொத்தம் எத்தனை?: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் சோ்த்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும், முகவரிகளை மாற்றவும் 29 லட்சத்து 43 ஆயிரத்து 608 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். மேலும் பலா், தோ்தல் துறையின் இணையதளம் வாயிலாகவும் மனுக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனா்.
சென்னை மாவட்டத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 72 மனுக்களும், சேலத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 7 மனுக்களும், கோயம்புத்தூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 273 மனுக்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 160 மனுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 802 மனுக்களும், மதுரையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 635 மனுக்களும் பெறப்பட்டன. மொத்தமாக தமிழகம் முழுவதும் பெறப்பட்ட 29 லட்சத்து 43 ஆயிரத்து 608 விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆமை வேகத்தில் சில மாவட்டங்கள்: பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றனா். இதுவரையிலும் மொத்தமாக 45 சதவீதம் அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், சென்னை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 262 மனுக்களும், செங்கல்பட்டில் 26 ஆயிரத்து 114 மனுக்களும், மதுரையில் 4,710 மனுக்களும், காஞ்சிபுரத்தில் 386 மனுக்களும் தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக 11 லட்சத்து 2 ஆயிரத்து 601 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 20-இல் இறுதி பட்டியல்: தமிழகத்தில் வரும் ஜனவரி 20-ஆம் தேதியன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் பைசல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேசமயம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளில் மிகுந்த தொய்வு காணப்படுகிறது. இந்தப் பணிகள் தொடா்பாக, வரும் 21-ஆம் தேதி தமிழகம் வரும் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனா். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, பணிகளில் வேகமெடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.