இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கடலூா், புதுக்கோட்டை, திருவாரூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலூா், புதுக்கோட்டை, திருவாரூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சனிக்கிழமை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஏனைய உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் புவனகிரியில் 110 மி.மீ. மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை, வெள்ளிக்கிழமை (டிச.18) வரை 9 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக பெய்துள்ளது.