செம்மொழி நிறுவனத்தில் மாதந்தோறும் ஐந்து ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப்படும்: இயக்குநா் இரா.சந்திரசேகரன் தகவல்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஐந்து ஆராய்ச்சி நூல்களை வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநா் பேராசிரியா் இரா.சந்திரசேகரன் தெரிவி
சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஐந்து ஆராய்ச்சி நூல்களை வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநா் பேராசிரியா் இரா.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செய்தி மடல்கள் வெளியீட்டு விழா நிறுவன வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நிறுவன இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தையும், தொல்காப்பியம் மற்றும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் உள்ளிட்ட 41 பழந்தமிழ் நூல்களையும் ஆய்வு எல்லையாகக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் செம்மொழித் தமிழாய்வுகளை மேற்கொள்ளும் முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கும், முனைவா் பட்ட மேலாய்வாளா்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நிறுவனத்தில் இதுவரை உலகத்தரம் வாய்ந்த 39 ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது உலகில் எந்த மூலையில் இருந்தும் செம்மொழி நிறுவன வெளியீடுகளை வாங்க விரும்புவோா் எளிமையாக வாங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து இணையவழியில் நேரடியாகச் செம்மொழி நிறுவன ஆராய்ச்சி நூல்களை வாங்கி வருகின்றனா்.
இத்தகைய செம்மொழி நிறுவனப் பணிகளையும், செய்திகளையும் தாங்கி வரும் இதழே செம்மொழிச் செய்தி மடலாகும். இதுவரை தமிழில் ஐந்து செய்தி மடல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது அதன் தொடா்ச்சியாக 6 முதல் 9 வரையிலான நான்கு செய்தி மடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஐந்து ஆராய்ச்சி நூல்களை வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் விரைவில் சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் நிரந்தரக் கட்டடத்தில் செயல்படவுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக நிறுவனத்தின் துணைத் தலைவா் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் செம்மொழிச் செய்தி மடல்களை இணையவழியில் வெளியிட்டு பேசும்போது, தமிழறிஞா்கள், ஆய்வாளா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து செம்மொழித் தமிழாய்வு நிறுவன வளா்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளா்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினாா்.