மாவட்ட அதிகாரிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுடன், தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.
சென்னை: சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுடன், தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் நேரடியாக கலந்து கொண்டனா். மற்ற மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் காணொலி வழியாக பங்கேற்றனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசனை நடத்தினா். குறிப்பாக, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம், கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் வாக்குச்
சாவடிகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று காலத்தில் தோ்தலை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களையும் தோ்தல் ஆணையக் குழுவினா் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலாளருடன் இன்று ஆலோசனை: இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனா். தலைமைச் செயலாளா் க.சண்முகம், காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, அரசுத் துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்டோருடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோனை நடத்துகின்றனா். இதன்பின், பத்திரிகையாளா் சந்திப்பு நடக்கவுள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளா் (பொது) உமேஷ் சின்ஹா, தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில், தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.ஆா்.ஸ்ரீனிவாசா, தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலே மாலிக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.