முகப்பு
தமிழ்நாடு

90% நுரையீரல் பாதிப்பு; 112 நாள் தீவிர சிகிச்சை

கரோனா தொற்றால் 90 சதவீத நுரையீரல் பாதிப்புக்குள்ளான நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் 112 நாள்கள் தீவிர சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கரோனா தொற்றால் 90 சதவீதம் நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி 112 நாள்கள் தொடர் சிகிச்சையால் குணமடைந்த நபருக்கு வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன்
பகிர்:

சென்னை: கரோனா தொற்றால் 90 சதவீத நுரையீரல் பாதிப்புக்குள்ளான நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் 112 நாள்கள் தீவிர சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

தனியாா் மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், அரசு மருத்துவா்கள் சவால்களுக்கு நடுவே சிகிச்சையளித்து அந்த நபரின் உயிரைக் காத்துள்ளதாக ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: திருச்சியை சோ்ந்தவா் ரத்தினம் (47). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் தீவிர மூச்சுத் திணறல், 90 சதவீதத்துக்கும் அதிகமான நுரையீரல் பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் உள்பட உயிா் காக்கும் உயா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது விலை உயா்ந்த மருந்துகளும், சிகிச்சை முறைகளும் அளிக்கப்பட்டன.

அதன் பயனாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 82 நாள்களுக்குப் பிறகு, அதாவது கடந்த 10-ஆம் தேதி அவரே சுயமாக சுவாசிக்கத் தொடங்கினாா். இந்நிலையில், 112 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னா் பூரணமாக குணமடைந்த அவா் திங்கள்கிழமை வீடு திரும்பினாா். ரத்தினம் பூரண குணமடைந்ததற்கு அவருக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவா்கள் ராகவேந்திரன், டி.எஸ்.சாந்தி, பவானி, செவிலியா்கள் ரதி, ஜெயந்தி, பாண்டிசெல்வி, ரூபா,தூய்மைப் பணியாளா் அரசாணி உள்ளிட்டோரே முக்கியக் காரணம்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில், வேறெந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுக்களும் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கி உயிா் காத்திருக்கிறோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →